குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர சட்ட உதவி; சிங்கப்பூர்-சுவிட்சர்லாந்து உடன்பாடு

2 mins read
202c787f-e9da-429b-86a4-185680d1e77a
உடன்பாட்டில் கையெழுத்திட்ட சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் (இடது), சுவிட்சர்லாந்தின் நீதித்துறை மற்றும் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான பேயட் யான்ஸ். - படம்: சட்ட அமைச்சு

குற்றவியல் விவகாரங்களில் சட்ட உதவி பெறுவதும் வழங்குவதும் தொடர்பான உடன்பாட்டில் சிங்கப்பூரும் சுவிட்சர்லாந்தும் வியாழக்கிழமை (ஜனவரி 22) கையெழுத்திட்டன.

உடன்பாட்டில் சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங், சுவிட்சர்லாந்தின் நீதித்துறை மற்றும் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான பேயட் யான்ஸ் ஆகியோர் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

அமைச்சர் டோங் சுவிட்சர்லாந்துக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஜனவரி 20ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதி வரை அந்நாட்டில் இருப்பார்.

எல்லை தாண்டிய குற்றங்களை எதிர்கொள்வது தொடர்பாகச் சிங்கப்பூருக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான வலுவான பங்காளித்துவத்தை இந்தப் புதிய உடன்பாடு மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரஸ்பர சட்ட உதவி விவகாரங்கள் தொடர்பாக ஏற்கெனவே நடப்பில் உள்ள ஒத்துழைப்பு அணுகுமுறை, இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ள கட்டமைப்பின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

குற்றவியல் தொடர்பான சட்ட உதவியைத் தடையற்ற வகையில் பெறவும் வழங்கவும் ஒப்பந்தம் வகை செய்கிறது.

தகவல் மற்றும் ஆதாரங்களைப் பெறுவது, தேடுதல் பணிகளை முடுக்கிவிடுவது, பறிமுதல் செய்வது, குற்றச் செயல்கள் மூலம் பெறப்பட்ட சொத்துகளை முடக்கிப் பறிமுதல் செய்வது ஆகியவை இதில் அடங்கும்.

“உலகளாவிய நிலையில் சிங்கப்பூரும் சுவிட்சர்லாந்தும் முன்னணி நிதி மையங்களாகத் திகழ்கின்றன. எனவே, இருநாடுகளின் சட்ட, நிதிக் கட்டமைப்புகளின் நம்பகத்தன்மையையும் நாணயத்தையும் பேணிக் காக்கும் பொறுப்பு இருதரப்பினருக்கும் உள்ளது. எல்லை தாண்டிய குற்றச் செயல்களை எதிர்கொள்ள இருநாடுகளுக்கும் இருக்கும் முனைப்பை இது பிரதிபலிப்பதுடன் பரஸ்பர நம்பிக்கை, ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டு சிங்கப்பூரும் சுவிட்சர்லாந்தும் வலுவான இருதரப்பு பங்காளித்துவத்தை உருவாக்கியிருப்பதை இது காட்டுகிறது,” என்று அமைச்சர் டோங் தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளியல் கருத்தரங்கின் வருடாந்திரக் கூட்டத்திலும் அமைச்சர் டோங் கலந்துகொள்கிறார்.

‘ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா?’ என்ற தலைப்பின்கீழ் அவர் அக்கூட்டத்தில் பேசவிருக்கிறார்.

சுவிட்சர்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபியாவின் முதலீட்டுத்துறை அமைச்சர் காலித் அப்துல் அசிஸ் அல் ஃபாலி, வரத்தக அமைச்சர் டாக்டர் மஜித் அல் கசாபி ஆகியோரையும் ஐக்கிய அரபு சிற்றரசுகள் அமைச்சரவையின் தலைமைச் செயலாளரான மரியம் அகமது அல் ஹமாடியையும் அமைச்சர் டோங் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒத்துழைத்துச் செயல்படக்கூடிய துறைகள் குறித்து அமைச்சர் டோங் அவர்களுடன் கலந்துரையாடுவார் என்று நம்பப்படுகிறது.

அமைச்சர் டோங்குடன் சட்ட அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகளும் சுவிட்சர்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்