நோன்பு நோற்க இயலாதவர்கள் ‘ஃபித்யா’ தொகையைச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் அதிகரிக்கும் கட்டணத்தை இனி மொத்தமாக செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) அறிவித்துள்ளது. எதிர்வரும் ரமலான் மாதத்திற்கான ஃபித்யா விகிதம் ஒரு நாளுக்கு $4 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்தது.
உடல்நலக்குறைவு காரணமாக நோன்பு நோற்க முடியாதவர்கள் அல்லது ரமலான் விதிகளை மீறியதற்குப் பரிகாரமாகச் செலுத்தப்படும் ஒருவகை பங்களிப்பே ஃபித்யா.
இதற்கிடையே, எதிர்வரும் ரமலானில் முஸ்லிம்கள் கட்டாயமாகச் செலுத்த வேண்டிய ‘ஸகாத் ஃபித்ரா’, ஒரு நபருக்கு $5 அல்லது $8 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடர் உடல்நலக்குறைவு, பயணம், கர்ப்பகாலம் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் போன்ற தகுந்த காரணங்களால் ஃபித்யா செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், அதை ஒட்டுமொத்தமாகச் செலுத்த வேண்டியதற்கான தேவை நீக்கப்படுவதாக முயிஸ் திங்கட்கிழமை (பிப்ரவரி 16) வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
“முஸ்லிம்கள் எத்தகைய சூழ்நிலையில் இருந்தாலும், அவர்களின் சமயக் கடமைகளை எளிதாக நிறைவேற்றுவதை இந்த அணுகுமுறை உறுதிசெய்கிறது,” என முயிஸ் சொன்னது.
தற்போது நடைமுறையில் உள்ள $1.40 என்ற ஃபித்யா விகிதம் 2014ல் நிர்ணயிக்கப்பட்டது. இத்தொகை செலுத்தப்படாத ஆண்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, இது கூட்டப்பட்டு வந்தது. இனி அந்த முறை இருக்காது.
புதிய விகிதமான ஒரு நாளுக்கு $4 என்பது, தற்போதைய சூழலில் சிங்கப்பூரில் ஒரு வேளை மிதமான அளவு உணவிற்காகும் சராசரி செலவைக் கருத்தில்கொண்டு ஆய்வின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2026 மார்ச் 21ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் ஷவ்வால் மாதத்தின் தொடக்கத்திலிருந்து இப்புதிய மாற்றம் முழுமையாக நடப்புக்கு வரும். தற்போதுள்ள $1.40 என்ற விகிதத்தில் ஃபித்யா செலுத்த விரும்புவோர் அதுவரை பழைய முறையிலேயே செலுத்தலாம்.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல், கடமை மீறுதல் போன்ற செயல்களுக்கான பரிகாரத் தொகையான ‘கஃபாரா’, தற்போதுள்ள $10லிருந்து ஒருவருக்கு $4ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது, ஃபித்யா விகிதத்துடன் ஒத்திருக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
சமூகத்திற்கு எளிமையான ஒரு முறையை உருவாக்கவும் உதவி பெறுவோர்க்குப் போதுமான உணவு கிடைப்பதை உறுதிசெய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முயிஸ் கூறியது.
ஸகாத் ஃபித்ராவைப் பொறுத்தவரை, சாதாரண விகிதம் மாற்றமின்றி $5ஆகத் தொடர்கிறது. உயர்தர அரிசியை உண்பவர்களுக்கான விகிதம் ஒரு நபருக்கு $8 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, 2025 விகிதத்தைவிட 10 காசு அதிகம்.

