தெம்பனிசில் இருக்கும் ‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ பாலர் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர், இரண்டு வயதுப் பிள்ளையைக் கடுமையாக நடத்தினார்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பிள்ளையின் பெற்றோர் அப்பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
அந்த ஆசிரியர்மீது பெற்றோர் அளித்த புகார் குறித்து அப்பள்ளி பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பிடம் செப்டம்பர் 26ஆம் தேதி தெரிவித்தது.
அந்தப் பள்ளியில் பயிலும் மற்ற இரு சிறார்களின் பெற்றோர்கள் அளித்த கருத்துகளைத் தனித்தனியாக விசாரித்து வருவதாகவும் அமைப்பு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.
பராமரிப்பு மற்றும் கற்பித்தல் பணிகளிலிருந்து அந்த ஆசிரியர் செப்டம்பர் 24ஆம் தேதி விடுவிக்கப்பட்டார் என்றும் செப்டம்பர் 27ஆம் தேதி அவர் பள்ளியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார் என்றும் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்ட பிள்ளையின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காகப் புகார் அளித்த பெற்றோர் குறித்த தகவலும் பள்ளி செயல்படும் இடம் குறித்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.
இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசிரியரின் இந்த அணுகுமுறைக்கும் பள்ளியின் கற்பித்தல் மற்றும் பராமரிப்புத் தரங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என ‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ பாலர் பள்ளியை நடத்தும் ‘என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பசின்’ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


