புதிய வீடு ஒன்றைத் தேடும் வேளையில், பொருள்களை சேமித்து வைக்கும் இடம் ஒன்றில் $16,000 மதிப்புடைய உடைமைகளை திருவாட்டி ஓங் யு டோங் வைத்திருந்தார். ஆனால், அவற்றுக்கு சேதம் ஏற்படும் என்று அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
2022 டிசம்பரில், அங் மோ கியோவில் உள்ள 'லாக்+ஸ்டோர்' எனும் பொருள் சேமிப்பு இடத்திலிருந்து தம்முடைய உடைமைகளை மீட்டுக்கொண்ட அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
சொகுசுப் பைகள், துணிமணிகள், கேலிச் சித்திர நூல்கள், சிறிய மேசை உள்ளிட்ட பொருள்கள் துருப்பிடித்து இருந்தன.
"சேதம் இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஏதோ மழைக்காட்டில் என்னுடைய பொருள்களை வைத்திருந்ததுபோல இருந்தது," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் திருவாட்டி ஓங் கூறினார்.
உற்பத்தித் துறையில் பணியாற்றும் திருவாட்டி ஓங், தம்முடைய வீட்டை விற்ற பிறகு பெற்றோருடன் வசித்து வந்தார். 2022 ஜனவரியில் அந்தச் சேமிப்புக் கிடங்கை வாடகைக்கு எடுத்தார்.
குளிர்சாதன வசதி இல்லாத அந்த இடம், பார்ப்பதற்கு எல்லாம் சரியாக இருந்ததாகக் கூறினார். அதை வாடகைக்கு எடுக்க ஓராண்டு வாடகைக் கட்டணம் ஏறத்தாழ $4,400.
"நான் வீடு மாறியபோதுதான், பொருள்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் ஈரமாக இருந்ததை ஊழியர்களைக் கவனித்தனர். அப்பெட்டிகளை லாரியில் அவர்கள் ஏற்றிக்கொண்டு இருந்தபோது அவை கிழிந்து, அவற்றிலிருந்த என் உடைமைகள் அனைத்தும் கீழே விழுந்தன," என்றார் திருவாட்டி ஓங்.
"என்னுடைய சொகுசுப் பைகள் சேதமுற்றதைக் கண்டு நான் அழுதுவிட்டேன்," என்று அவர் சொன்னார்.
சுவரிலிருந்து அந்தப் பெட்டிகள் நகற்றப்பட்டபோது அவற்றுக்குள் தண்ணீர் புகுந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டதை திருவாட்டி ஓங் கண்டறிந்தார். தம்முடைய பிரிவுக்குப் பக்கத்தில் இருந்த குளிர்சாதன வசதியுடைய பிரிவிலிருந்து தண்ணீர் நுழைந்திருக்கலாம் என்று அவர் சொன்னார்.
இதுகுறித்து 'லாக்+ஸ்டோர்' விளம்பர, வாடிக்கையாளர் அனுபவப் பிரிவுத் தலைவர் லியோனா லோ கூறுகையில், தண்ணீர் கசிவு காரணமாக இந்தப் பாதிப்பு ஏற்படவில்லை என்றார்.
"குளிர்சாதன வசதி இல்லாத பிரிவுகளிடம் வெப்பநிலை அல்லது ஈரத்தன்மை கட்டுப்பாடு கிடையாது," என்று குறிப்பிட்ட அவர், சேவை வழங்குநரின் விதிகள், நிபந்தனைகளின்படி, வாடிக்கையாளரின் சொந்த பொறுப்பில் பொருள்கள் சேமித்து வைக்கப்படுவதாகச் சொன்னார்.
திருவாட்டி ஓங்கிற்கு ஏதேனும் இழப்பீடு வழங்கப்பட்டதா என்பது பற்றி கருத்துரைக்க மறுத்த திருவாட்டி லோ, "வாடகைதாரருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்," என்றார்.
நல்லெண்ண அடிப்படையில் தமக்கு $2,000யும் சொசுகுப் பை உள்ளிட்ட மூன்று பொருள்களுக்காக $500யும் வழங்கப்பட்டதாக திருவாட்டி ஓங் சொன்னார்.
சேதமுற்ற பொருள்களில் அவருடைய மகளின் பாலர்பள்ளிச் சான்றிதழும் புகைப்படமும் அடங்கும். தம்முடைய ஏழு வயது மகன், 10 வயது மகளுடன் தோ பாயோ வீட்டில் வசித்து வரும் திருவாட்டி ஓங், "சேதமுற்ற பொருள்களைப் பார்த்தபோது, என் மனம் உடைந்தது," என்றார்.

