நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு உதவ செஞ்சிலுவைச் சங்கத்தின் வழியாக ஓசிபிசி வங்கி 50,000 வெள்ளியை நன்கொடையாக வழங்கவிருக்கிறது.
ஏப்ரல் 3ஆம் தேதியிலிருந்து பல்வேறு தளங்கள் வழியாக வாடிக்கையாளர்களிடமிருந்து நன்கொடையைத் திரட்ட வங்கி ஏற்பாடு செய்துள்ளது. ஏடிஎம், ஓசிபியின் இணையத் தளம், வங்கியின் கைப்பேசி செயலி உள்ளிட்ட தளங்கள் வழியாக நன்கொடை ஏற்றுக் கொள்ளப்படும்.
அனைத்து நன்கொடைகளும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் வழங்கப்படும் என்று ஏப்ரல் 1ஆம் தேதி அறிக்கையில் ஓசிபிசி தெரிவித்தது.
பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய நன்கொடைப் பயன்படுத்தப்படும். இவற்றில் அத்தியாவசியப் பொருள்களான உணவு, குடிநீர், போர்வை, தூய்மைப் பொருள்களும் அடங்கும். மார்ச் 28ஆம் தேதி மதிய வேளையில் 7.7 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியதில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தில் சேதமடைந்த இடங்களில் உதவிக் குழுக்கள் வந்து சேர்ந்துள்ளன. மக்களின் உடனடி தேவைகளான உணவு, தூய்மையான நீர், இருக்க இடம் உள்ளிட்டவற்றுக்கு அவை ஏற்பாடு செய்து வருகின்றன.
தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்ட ஓசிபிசி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹெலன் வோங், நிலநடுக்கம் ஏற்படுத்தியுள்ள சேதம், உயிரிழப்பு எங்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது என்றார்.
மியன்மாரில் வங்கிக் கிளையில் பணியாற்றும் ஊழியர்களின் நலன்களை உறுதி செய்வதற்காக ஊழியர் ஆதரவுத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.