தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சித்திரவதையால் மாண்ட பணிப்பெண்: மூன்றாவது குற்றவாளியாக முன்னாள் காவல்துறை அதிகாரி

2 mins read
a39d1080-3f13-4194-9b65-efba5dde2c30
கெவின் செல்வம், மாண்ட பணிப்பெண் பியாங் இங்காய் டொன். - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், வெளிநாட்டு ஊழியர் உதவி நிலையம்

தொடர் சித்திரவதையால் உயிரிழந்த மியன்மார் நாட்டுப் பணிப்பெண் தொடர்பான வழக்கில், முன்னாள் காவல்துறை அதிகாரி கெவின் செல்வம் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

அந்தச் சம்பவம் தொடர்பில், 44 வயதான அவர் மீது வியாழக்கிழமை (ஏப்ரல் 10) நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

சிங்கப்பூர் கண்டிராத ஆக மோசமான சித்திரவதைச் சம்பவம் என்று கூறப்படும் மியன்மார் பணிப்பெண் மரணம் 2016ஆம் ஆண்டு நிகழ்ந்தது.

35 நாள்கள் பட்டினி போட்டதால், பியாங் இங்காய் டொன் என்னும் அந்தப் பணிப்பெண் 39 கிலோ எடையிலிருந்து 15 கிலோ எடை குறைந்தார்.

2016ஆம் ஆண்டு இறக்கும்போது அவரின் எடை 24 கிலோவாக இருந்தது.

பணிப்பெண்ணின் முதலாளியாக செல்வத்தின் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தது.

மரணத்தை ஏற்படுத்திய கொடூரச் சம்பவத்தில் செல்வத்தின் முன்னாள் மனைவி காயத்ரி முருகையனும் காயத்ரியின் தாயார் பிரேமா நாராயணசாமியும் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டனர்.

2021ஆம் ஆண்டு காயத்ரிக்கு 30 ஆண்டுச் சிறைத் தண்டனையும் 2023ஆம் ஆண்டு பிரேமாவுக்கு 17 ஆண்டுச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டன. அப்போது காயத்ரியின் வயது 41. அவரது தாயார் பிரேமாவின் வயது 64.

கொடுமைக்குத் துணை போனதாக தற்போது செல்வம்மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மூன்றாவது குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

பணிப்பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, தரையில் இருந்து அவரைத் தூக்கியதன் மூலம் வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டும் செல்வம்மீது சுமத்தப்பட்டு உள்ளது.

வழக்கைக் கையாண்ட காவல்துறை அதிகாரியிடம் பொய் கூறியதாகவும் தமது பீஷான் வீட்டில் இருந்த சிசிடிவி படக்கருவியை அகற்றியதன் மூலம் சாட்சியை அழித்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் குற்றவாளி என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

2016 ஜூலை 26ஆம் தேதி தமது 24வது வயதில் பணிப்பெண் உயிரிழந்தார்.

2016 ஆகஸ்ட் 1ஆம் தேதி கைது செய்யப்பட்ட செல்வம், காவல்துறை பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் 2020ஆம் ஆண்டு செல்வமும் காயத்ரியும் மணவிலக்குப் பெற்றனர்.

குறிப்புச் சொற்கள்