போலிக் கடப்பிதழுடன் சிங்கப்பூர் திரும்பிய மியன்மார் ஆடவர் கைது

போலிக் கடப்பிதழுடன் சிங்கப்பூர் திரும்பிய மியன்மார் ஆடவர் கைது

2 mins read
bcdbf57a-aee5-4e84-97a8-b2c1d48423e0
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாக மலேசியாவிற்குள் மின்னை அழைத்துச் செல்வதாகக் கூறி, காரின் பின்பகுதியில் ஒளிந்துகொள்ளுமாறு முகவர் ஒருவர் அவரை அறிவுறுத்தினார். - படம்: அன்ஸ்பிளாஷ்

சிங்கப்பூரில் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்து, ஒரு காரின் பின்பகுதியில் மறைந்து தப்பிச் செல்வதற்கு $3,000 செலுத்திய 43 வயதான மியன்மார் நாட்டவருக்கு 16 வாரச் சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்டவரான மின் ஆங் நுவே பைங், ஜூன் 5ஆம் தேதியன்று நான்கு குற்றச்சாட்டுகளில் இரண்டை ஒப்புக்கொண்டதாக ஷின் மின் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்படுமுன் மற்றக் குற்றச்சாட்டுகளும் கருத்தில்கொள்ளப்பட்டன.

‘மதர்ஷிப்’ ஊடகம் பார்த்த குற்றப்பத்திரிகையின்படி, மின் 2013 செப்டம்பர் 23ஆம் தேதியன்று சிங்கப்பூருக்குள் நுழைந்தார். அவருக்கு வழங்கப்பட்ட 30 நாள் வருகை அனுமதிச்சீட்டு அதே ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதியன்று காலாவதியானது.

வருகை அனுமதிச்சீட்டு காலாவதியான பிறகும் அவர் 137 நாள்கள் சட்டவிரோதமாக சிங்கப்பூரில் தங்கியிருந்தார்.

அதனால், தான் கைதுசெய்யப்படலாம் என்று அவர் அஞ்சியதாகக் கூறப்பட்டது.

பின்னர், அடையாளம் தெரியாத ஒருவர் அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அந்த மனிதர் $3,000 கொடுத்தால் சட்டவிரோதமாக சிங்கப்பூரைவிட்டு வெளியேற உதவுவதாக மின்னிடம் கூறினார்.

அதன்படி 2014 மார்ச் 9ஆம் தேதி இரவு 11 மணியளவில் இருவரும் உட்லண்ட்ஸ் அருகே உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் சந்தித்தனர்.

பின்னர் அந்த மனிதர், உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாக மலேசியாவிற்குள் மின்னை அழைத்துச் செல்வதாகக் கூறி, காரின் பின்பகுதியில் ஒளிந்துகொள்ளுமாறு அவரை அறிவுறுத்தினார்.

கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் கழித்து, அவர் மலேசியாவின் ஜோகூர் பாருவைச் சென்றடைந்தார். பின்னர் அவர் பேருந்தில் தாய்லாந்திற்குப் பயணம் செய்து, இறுதியில் மியன்மாருக்குத் திரும்பினார்.

சிங்கப்பூருக்கு வெளியே ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் கழித்த பிறகு 2024 நவம்பர் 14ஆம் தேதியன்று மின் சிங்கப்பூருக்குத் திரும்ப முடிவுசெய்தார்.

தனது அடையாளத்துடன் பொருந்தாத விவரங்களைக் கொண்ட கடப்பிதழைப் பெறுவதற்காக ஒரு முகவருக்கு மின் கிட்டத்தட்ட $610 கொடுத்தார்.

மே 12 அன்று மின் கைது செய்யப்பட்டபோது அவர் சிங்கப்பூரில் ஓராண்டு, ஐந்து மாதங்கள், 28 நாள்கள் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்
விசாமியன்மார்சோதனைச் சாவடி