தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பதிவிறக்க வேகத்துக்கு வரம்பு விதிக்காத மைரிபப்ளிக்கின் கொள்கை தொடரும்: ஸ்டார்ஹப்

1 mins read
55572ced-bc87-4e69-9cda-25acc858578e
நெக்ஸ் கடைத்தொகுதியில் உள்ள மைரிபப்ளிக் கடை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மைரிபப்ளிக் நிறுவனத்தின் அகண்ட அலைவரிசை (broadband) சேவையை ஆகஸ்ட் 12ஆம் தேதி முழுமையாகக் கையகப்படுத்திய ஸ்டார்ஹப் நிறுவனம், மைரிபப்ளிக்கின் ‘நோ-திராட்லிங்’ (no-throttling) கொள்கை குறித்து முதல்முறையாக மௌனம் கலைத்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த வசதியைத் தொடர்ந்து பெறுவார்கள் என்று ஸ்டார்ஹப் உறுதியளித்துள்ளது.

அனைத்துலகப் பதிவிறக்கத்துக்கு வேக வரம்பு விதிப்பதே ‘திராட்லிங்’ என அழைக்கப்படுகிறது.

2011ல் மைரிபப்ளிக் தொடங்கப்பட்டதிலிருந்து, பதிவிறக்க வேகத்தில் எவ்வித வரம்பும் விதிக்கப்படாது என உறுதியளித்து வந்துள்ளது. இதனால், பயனர்கள் அவ்வளவாகத் தடங்கலின்றி இணையத்தைப் பயன்படுத்தவும் இணைய விளையாட்டில் ஈடுபடவும் காணொளிகளைப் பார்க்கவும் முடிந்தது.

இந்நிலையில், புதன்கிழமை (ஆகஸ்ட் 20) நடந்த செய்தியாளர் சந்திப்பில், பதிவிறக்கத்துக்கு மைரிபப்ளிக் வாடிக்கையாளர்கள் வேக வரம்புகளை எதிர்நோக்க மாட்டார்கள் என்பதை ஸ்டார்ஹப் நிறுவனத்தின் பயனீட்டாளர் வணிகப் பிரிவுத் தலைவர் மேட் வில்லியம்ஸ் உறுதிப்படுத்தினார்.

“தெளிவாகச் சொல்வதென்றால், மைரிபப்ளிக் அகண்ட அலைவரிசை சேவை அப்படியே தொடரும். சிறந்த தரம், அதிவேகம், நம்பகத்தன்மையுடன் அது இருக்கும்,” என்று திரு வில்லியம்ஸ் கூறினார்.

ஸ்டார்ஹப்பும் மைரிபப்ளிக்கும் இணைந்து 578,000 அகண்ட அலைவரிசை சந்தாதாரர்களைக் கொண்டுள்ளன. சந்தையில் முன்னணி வகிக்கும் சிங்டெல் நிறுவனம், 680,000 சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. எம்1 நிறுவனம் 223,000 சந்தாதாரர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்