செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் வெடிக்கக்கூடிய கருவி போன்ற மர்மப் பொருளை வைத்த சந்தேகத்தின் தொடர்பில் ஆடவர் ஒருவர்மீது திங்கட்கிழமை (டிசம்பர் 22) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாதச் செயல் நடக்கப்போவதைப் போன்ற பொய்யான மிரட்டலை விடுத்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. கோகுலநந்தன் எனும் அந்த 26 வயது ஆடவர் தேவாலயத்தில் தொண்டூழியராக இருப்பவர்.
ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 7 மணியளவில் அவர் குற்றத்தைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. கோகுலநந்தன் தனித்துச் செயல்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
நீள்வட்ட அட்டைக்குள் கூழாங்கற்களை நிரப்பி, சிவப்புக் கம்பிகளைச் சுற்றி, அவற்றைக் கறுப்பு, மஞ்சள் ஒட்டுநாடாக்களைக் கொண்டு ஒட்டி, தேவாலய வளாகத்தில் அவர் வைத்ததாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
அந்தப் பொருள் பற்றி எரியக்கூடும் அல்லது வெடிக்கக்கூடும் என்றும் மக்களுக்கோ சொத்துக்கோ சேதம் ஏற்படுத்தக்கூடும் என்றும் இன்னொருவரிடம் அச்சத்தை ஏற்படுத்துவதற்காகக் கோகுலநந்தன் அவ்வாறு செய்ததாகச் சொல்லப்படுகிறது.
சமயத்துடன் தொடர்புடைய தாக்குதலாகவோ பயங்கரவாதச் செயலாகவோ இருக்கும் என்பதற்குத் தற்போதைய நிலையில் எந்த ஆதாரமும் இல்லை என்று காவல்துறை முன்னர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
காவல்துறைக்கு விவகாரம் குறித்துத் தெரியவந்ததும், தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டுச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
காலை 7.30 மணிக்கு நடைபெறவிருந்த சீன மொழிப் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு முன்பு சம்பவம் நடந்ததாகத் தேவாலயத்திற்குச் செல்லும் ஒருவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
கோகுலநந்தன், மருத்துவப் பரிசோதனைக்காகச் சாங்கி சிறை வளாக மருத்துவ நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
அவர் அடுத்த மாதம் (ஜனவரி 2026) 12ஆம் தேதி நீதிமன்றத்திற்குத் திரும்புவார்.
பயங்கரவாதச் செயல் நடக்கப்போவதைப் போன்ற பொய்யான மிரட்டலை விடுத்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்குப் பத்தாண்டு வரை சிறைத்தண்டனையோ S$500,000 வரை அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படக்கூடும்.

