கோலாலம்பூர்: 1எம்டிபி ஊழல் வழக்கில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும்படி மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாகிற்கு கோலாலம்பூர் உச்ச நீதிமன்றம் அக்டோபர் 30ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.
அந்தக் குற்றச்சாட்டுகள் தவறாகவோ வெறுப்பின் காரணமாக நியாயமற்ற வகையிலோ சுமத்தப்பட்டவை அல்ல என்பதால் நஜிப் அவற்றுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
லஞ்ச ஊழல், பணமோசடி தொடர்பான வழக்குகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து நஜிப் சிறைத்தண்டனையை நிறைவேற்றிவருகிறார்.
71 வயதாகும் அவர் முன்னர் மலேசியாவின் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் பதவி வகித்தபோது ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
தமது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக 2.28 பில்லியன் ரிங்கிட் (690 மில்லியன் வெள்ளி) தொகையை 1எம்டிபி நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்டதன் தொடர்பில் நான்கு குற்றச்சாட்டுளையும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது தொடர்பான 21 குற்றச்சாடுகளையும் அவர் எதிர்கொண்டார்.
இவ்வழக்கு தொடர்பில் அக்டோபர் 24ஆம் தேதி, மலேசியர்கள் அனைவரிடமும் நஜிப் வெளிப்படையாக மன்னிப்புக் கோரினார். அவரது அறிக்கையை நஜிப்பின் மகன் வாசித்தார்.
தனது வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்ட தொகை 1எம்டிபி நிதியிலிருந்து வந்தது என்பதைத் தான் அறிந்திருக்கவில்லை என்று அறிக்கையில் நஜிப் குறிப்பிட்டுள்ளார். நடந்தவற்றுக்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர் அன்வார் இப்ராகிம், அக்டோபர் 25ஆம் தேதி, நஜிப்பின் மன்னிப்பை வரவேற்பதாகக் கூறினார்.