பிரபலத் தகவல் பரிமாற்றச் செயலியான வாட்ஸ்அப், பயனர்கள் தங்களது கைப்பேசி எண்களை மறைத்து, தங்களுக்கு விருப்பமான பயனர் பெயர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் புதிய தனியுரிமை அம்சத்தை 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யவுள்ளது.
இதன் அதிகாரபூர்வ அறிமுகத்துக்கு முன்னதாகவே, ஆள்மாறாட்டம் செய்வதைத் தடுக்கும் நோக்கில், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், சுகாதார அமைச்சர் ஓங் யி காங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் போன்ற முக்கிய அரசியல் தலைவர்களின் அதிகாரபூர்வ பயனர் பெயர்களைப் பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களது பெயர்களைப் போன்றே தோற்றமளிக்கும் பயனர் பெயர்களும் பாதுகாப்பு கருதி முடக்கப்பட்டுள்ளன. புதிய அம்சத்தின்படி, பயனர்கள் ஒரு பயனர் பெயரைத் தேர்ந்தெடுத்தால், அவர்கள் முதன்முறையாகத் தொடர்புகொள்ளும் நபர்களுக்கு அவர்களின் தொலைபேசி எண் தெரியாது.
இந்த அம்சத்தைப் பயன்படுத்த விரும்பாதவர்கள் தங்களது வழக்கமான கைப்பேசி எண்களையே தொடர்ந்து பயன்படுத்தலாம். மேலும், ஆள்மாறாட்டம் மற்றும் மோசடிகளைத் தவிர்க்கப் பல பாதுகாப்பு வழிகளை வாட்ஸ்அப் உருவாக்கியுள்ளது.
இதன்படி, பயனர் பெயர் விவரப் பட்டியலை மற்றவர்கள் தேடிப் பார்க்க முடியாது. அத்துடன், புதிய நபர்கள் தொடர்புகொள்வதைக் கட்டுப்படுத்த நான்கு இலக்கப் பாதுகாப்பு எண் போன்ற கூடுதல் அம்சங்களும் வழங்கப்படவுள்ளன.
இருப்பினும், இந்த மறைமுகத் தகவல் பரிமாற்ற வசதி இணையத்தின்வழிக் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளுக்கு வழிவகுக்கும் என்ற கவலை உலகளவில் எழுந்துள்ளது. இதன் காரணமாக, இத்தகைய வசதி மோசடிகளுக்குத் துணைபோகும் என்று எச்சரித்துள்ள இந்திய அரசாங்கம், இந்த அம்சத்தின் அறிமுகத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
வாட்ஸ்அப்பின் இந்தப் புதிய அம்சம் இவ்வாண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும்போதிலும் அதைப் பயன்படுத்துவோர் தங்களுக்கு விருப்பமான பயனர் பெயரை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
பயனர் பெயர் தொடர்பாகச் சர்ச்சை எழுந்தால் வாட்ஸ்அப்பிடம் புகார் அளிக்கலாம். அதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்.

