என்டியு-நேனோஃபிலிம் டெக்னாலஜிஸ் $66 மில்லியன் மதிப்பில் ஆய்வகம் திறப்பு

என்டியு-நேனோஃபிலிம் டெக்னாலஜிஸ் $66 மில்லியன் மதிப்பில் ஆய்வகம் திறப்பு

2 mins read
d7959798-6bd6-4cc8-9750-334f5ac923dd
என்டிஐ-என்டியு ஆய்வகத் திறப்பு விழாவில், சிங்கப்பூர் தேசிய பல் மருத்துவ நிலையக் காட்சி அங்கத்தில் செயற்கை பல் மாதிரிகளை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் பார்வையிடுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இழந்த பற்களுக்குப் பதிலாக செயற்கைப் பற்களைப் (implant) பொருத்திக்கொள்வோர், இனி விரைவாகக் குணமடையவும் கிருமித்தொற்று அபாயத்தைக் குறைக்கவும் புதிய தொழில்நுட்பம் வழிவகை செய்யவுள்ளது. இதற்காக மேம்படுத்தப்பட்ட மேற்பூச்சு தொழில்நுட்பம் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படும் கரிமத்தாலான மேற்பூச்சுகள், மனித முடியைவிட ஆயிரம் மடங்கு சிறிதாக இருக்கும். இவை செயற்கைப் பற்களை அதிக உறுதியுடனும் திசுக்களுடன் எளிதில் ஒன்றிணையக்கூடியதாகவும் மாற்றும்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு) நேனோஃபிலிம் டெக்னாலஜிஸ் இன்டர்நேஷனல் (என்டிஐ), சிங்கப்பூர் தேசிய பல் மருத்துவ நிலையம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், திங்கட்கிழமை (ஏப்ரல் 20) நடைபெற்ற $66 மில்லியன் மதிப்புள்ள என்டிஐ-என்டியு ஆய்வகத்தின் திறப்பு விழாவின்போது கையெழுத்தானது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டான் சீ லெங், 2023ல் ஓர் ஆய்வுத் திட்டமாகத் தொடங்கப்பட்ட இந்த ஆய்வகம், தற்போது தொழில்துறை அமைப்புகளுடனும் மேம்பட்ட ஆய்வுத் தளங்களுடனும் முழுமையாகச் செயல்படத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

அதிவேகமாக வளர்ந்துவரும் துறைகளில் சிங்கப்பூரின் நிலையை வலுப்படுத்தவும் சிங்கப்பூரர்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும் இந்த ஆய்வகம் உதவும் என்று அவர் கூறினார்.

“ஆய்வுத் துறையில் எட்டப்படும் சாதனைகள், சந்தைக்குத் தேவையான தீர்வுகளாக மாற்றப்படுவதையும் அவை பொருளியல் மதிப்பை உருவாக்குவதையும் உறுதிசெய்ய இத்தகைய பங்காளித்துவ முயற்சிகள் தொடர வேண்டும்,” என்றார் மனிதவள அமைச்சருமான டாக்டர் டான்.

இதற்கிடையே, ஜெர்மனியின் முன்னணி ஆய்வுக் கழகங்களில் ஒன்றான ‘மேக்ஸ் பிளாங்க் சொசைட்டி’ உடனான கூட்டு முயற்சியுடன், என்டியு வளாகத்தில் இரண்டு மையங்கள் திங்கட்கிழமை தொடங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்