செரீனா லிங், தலைமைப் பொருளியல் நிபுணர், ஓசிபிசி வங்கி
நீடிக்கும் ஈரான் போர் உலகப் பொருளியல் மந்தநிலை, பணவீக்கம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகளாவிய எண்ணெய், எரிவாயுப் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கையாளும் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியிருப்பதால் எரிசக்தி விலை பெருமளவு உயர்ந்துள்ளது.
சிங்கப்பூரில் நேரடித் தாக்கம்
இந்த உலகளாவிய சூழல் சிங்கப்பூர் குடும்பங்களை நேரடியாகப் பாதிக்கும். இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மின்சாரம், எரிவாயுக் கட்டணங்கள் உயரும். போர் நீடித்தால், இந்த உயர்வு இன்னும் கூடுதலாக இருக்கும். சிங்கப்பூரின் 2026ஆம் ஆண்டுக்கான பொருளியல் வளர்ச்சி இலக்கான 2-4% என்பது தற்போது மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
பொருளியல் சவால்கள்
தற்போது எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு யுஎஸ் $100 முதல் $120 வரையாக உள்ளது. இது யுஎஸ் $130 முதல் 150 டாலர் வரை உயர்ந்தால், பல நாடுகள் பொருளியல் சரிவை எதிர்கொள்ளும். இறக்குமதி செய்யப்படும் எரிபொருளைச் சார்ந்துள்ள ஆசிய நாடுகளுக்கு இது பெரும் சுமை.
மேலும், அதிக வட்டி விகிதங்கள் தொடர்ந்தால், தற்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையின் முதலீடுகளும் பாதிக்கப்படலாம்.
சிங்கப்பூர் இச்சவால்களைச் சமாளிக்கச் சில முக்கிய உத்திகளைக் கொண்டுள்ளது:
- சிங்கப்பூரின் வலுவான கையிருப்பு நிதியைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட துறைகளுக்கும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கும் ஆதரவு வழங்க முடியும்.
- வர்த்தக ஊக்குவிப்பின் முக்கிய காரணியான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பைக் கூட்டுவதற்கு அனுமதித்த அதேவேளையில், வெளிப்புறச் சூழல்களால் ஏற்படக்கூடிய பணவீக்கத்தைத் தணிப்பதற்கான நடவடிக்கையையும் நாணய ஆணையம் அனுமதிக்கக்கூடும்.
- எரிவாயுக் கொள்முதலில் அதிக நிலைத்தன்மையான வழிமுறை பின்பற்றப்படுகிறது. அத்துடன் மையப்படுத்தப்பட்ட கொள்முதல் மூலம், ஒருங்கிணைப்பையும், பேரம் பேசும் சக்தியையும் அதிகரிப்பதுடன் இறுக்கமான சந்தையில் விநியோகத்தை உறுதிசெய்ய முடியும்.
- ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒத்துழைப்பு, நீண்ட கால ஒப்பந்தங்கள் மூலம் விநியோகத்தை உறுதி செய்தல்.
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை விரைவுபடுத்துதல் மூலமான மாற்றுவழிகள்.
சிங்கப்பூரின் பொருளியல் தற்காப்புக்கான முயற்சிகள்
சிங்கப்பூர் தனது அண்டை நாடுகளுடன் இணைந்து வட்டார அளவிலான எரிசக்தி இருப்பைப் பகிர்ந்துகொள்வது, ‘ஆசியான் மின்சாரக் கட்டமைப்பு’த் திட்டத்தை விரைவுபடுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் போன்ற திட்டங்கள் மூலம் உற்பத்தியையும் விநியோகச் சங்கிலியையும் ஒருங்கிணைப்பதன் வாயிலாக, வெளிப்புறப் போக்குவரத்துத் தடங்கல்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து, பொருளியல் தற்காப்பை மேம்படுத்த சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வருங்காலத்தில் இத்தகைய பொருளியல் பாதிப்புகளிலிருந்து மீண்டெழும் வலிமையைப் பெறுவதே சிங்கப்பூரின் முதன்மை இலக்காகும்.
எரிசக்தி, வணிகம், மூலதனம் ஆகியவற்றின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதே ஒரு நாட்டின் பொருளியல் தற்காப்பிற்கு அடிப்படை ஆதாரம் என்பதை தற்போதைய உலகச் சூழல் உணர்த்துகிறது.

