நாதன்: அரசாங்கத்தை எண்ணி கவலைப்பட்டார் பிரித்தம் சிங்

நாதன்: அரசாங்கத்தை எண்ணி கவலைப்பட்டார் பிரித்தம் சிங்

3 mins read
fd0fde60-5a14-4e9e-a726-b25613ef5974
பிரித்தம் சிங் வழக்கின் ஐந்தாம் நாளன்று அரசுத் தரப்பினரால் விசாரிக்கப்பட்ட யுதிஷ்த்ரா நாதன் நீதிமன்றத்தைவிட்டு வெளியேறுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ரயீசா கான் பொய்யுரைத்தற்கான ஆதாரத்தை அரசாங்கம் ஏற்கெனவே கொண்டுள்ளது அல்லது அவர் பொய்யுரைத்ததை அரசாங்கம் எப்படியாவது தெரிந்துகொள்ளும் என்பது குறித்து கவலைப்படுவதாக பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் தம்மிடம் கூறியதாக அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர் யுதிஷ்த்ரா நாதன் தெரிவித்துள்ளார்.

திரு பிரித்தம் சிங் தொடர்பான நீதிமன்ற வழக்கின் மூன்றாவது சாட்சியாக திரு நாதனை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) அரசுத் தரப்பு வழக்கறிஞர் சிவகுமார் ராமசாமி விசாரித்தபோது அவர் அவ்வாறு கூறினார்.

2021 அக்டோபர் 12ஆம் தேதி திரு பிரித்தம் சிங், தம்மையும் உதவியாளர் லோ பெய் யிங்கையும் சந்தித்தபோது, “(உள்துறை, சட்ட) அமைச்சர் சண்முகத்திற்கும் அரசாங்கத்திற்கும் அவர் மிகவும் பயப்பட்டதாக நான் அப்போது உணர்ந்துகொண்டேன். அந்தப் பொய்யை கட்சி தொடர்ந்து நிலைநாட்டி வந்தால் அது தீய கர்மாவாக (bad karma) அக்கட்சியைச் சேரும்,” என்று திரு நாதன் கூறினார்.

பாட்டாளிக் கட்சியில் ஆறு ஆண்டுகளாக உறுப்பினராக இருந்த திரு நாதன், பின் 2022ல் கட்சியைவிட்டு வெளியேறினார். கட்சியின் ஊடகக் குழுவில் திரு சிங்குடன் அவர் பணியாற்றினார்.

2018ல் கட்சியின் தலைமைச் செயலாளராக திரு சிங் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, கட்சியின் மத்திய செயற்குழுவில் சேரும்படி திரு சிங் தம்மை அழைத்ததாகவும் அதுபற்றி யோசித்த பிறகு அதனை மறுத்ததாகவும் திரு நாதன் கூறினார்.

செங்காங் குழுத்தொகுதியுடனான தமது ஈடுபாட்டின்மூலம் திருவாட்டி கானுக்கு அறிமுகமானதாகக் கூறிய திரு நாதன், சமூக ஊடகப் பதிவுகள் குறித்து அவருக்கு ஆலோசனை வழங்கி வந்ததாகவும் சொன்னார்.

அத்துடன், திருவாட்டி கான் தம் நாடாளுமன்ற உரைகளின் வரைவுகளைப் பகிரும் வாஸ்ட்அப் குழுவிலும் திரு நாதன் உள்ளார். தங்கள் இருவருக்கும் இடையிலான உறவு பணி சார்ந்ததாகவும் நட்பார்ந்ததகாவும் இருந்ததை அவர் குறிப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் தான் உரைத்த கதை பொய்யானது என்று 2021 ஆகஸ்ட் 7ஆம் தேதி ஸூம் வழியாக திருவாட்டி கான், தம்மிடமும் அப்போதைய உதவியாளர் லோ பெய் யிங்கிடமும் தெரிவித்தது குறித்து வழக்கறிஞர் சிவகுமார் நீதிமன்றத்தில் கேட்டிருந்தார்.

அந்த அழைப்பின்போது திருவாட்டி கான், தாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதைப் பற்றிக் கூறியதைக் கேட்டு வருத்தப்பட்டதாகக் கூறிய திரு நாதன், அதே நேரத்தில் திரு கானின் பொய் பிறகு விவகாரமாக உருவெடுக்கும் என எதிர்பார்த்ததால் கவலை அடைந்ததாகவும் கூறினார்.

இருந்தபோதும் அந்நேரத்தில் திருவாட்டி கான், தாம் பொய் சொன்னதை திரு பிரித்தம் சிங்கிடம் தெரிவித்தாரா என்பது குறித்து அவர் எதுவும் சொன்னதாக நினைவு இல்லை என்று திரு நாதன் கூறினார்.

பொய் சொன்னது குறித்த விவரத்தைத் தன்னுடன் ‘கல்லறைக்கு எடுத்துச் செல்ல’ பாட்டாளிக் கட்சித் தலைவர்கள் கூறியதாக திருவாட்டி கான், மூன்று பேருள்ள வாட்ஸ்அப் குழுவில் அனுப்பியபோது அந்தக் குறுஞ்செய்தி பற்றிய தமது புரிதல் என்ன என்பது பற்றி திரு நாதனிடம் கேட்கப்பட்டது.

“கல்லறைக்கு எடுத்துச் செல்வது’ என்றால் அந்தப் பொய்யை முழுமையாக மறைக்கும்படி பிரித்தம் சிங், சில்வியா லிம், ஃபைஷால் மனாப் ஆகியோர் உத்தரவிட்டதாகப் புரிந்துகொண்டேன்,” என்றார் திரு நாதன்.

2021 ஆகஸ்ட் 10க்கும் அக்டோபர் 4ஆம் தேதிக்கும் இடையே பொய்யைப் பற்றி திரு சிங் தம்மிடம் எதுவும் பேசவில்லை என்று திரு நாதன் கூறினார்.

நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவுக்கு ஆதாரங்களை அனுப்புவதற்கு முன்னதாக குறுஞ்செய்திகளை திரு நாதன் மறைத்தது குறித்தும் கேட்கப்பட்டது.

2021 டிசம்பர் 2ல் சிறப்புரிமைக் குழுவிடம் தம் சாட்சியத்தைக் கூறிய பிறகு, நீக்கப்போகும் குறுஞ்செய்திகளைத் தேர்நதெடுத்ததாக அவர் சொன்னார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஹாயு மஹ்ஸாம் பக்கத்தில் அமர்ந்ததாகவும் தமது கைப்பேசியிலிருந்து எடுக்கப்பட்ட குறுந்தகவல்களைப் படித்ததாகவும் திரு நாதன் கூறினார்.

திருவாட்டி ரஹாயு முன்கூட்டியே புறப்பட்ட வேண்டியிருந்ததால், மீதமுள்ள நீக்கங்களை நாடாளுமன்ற கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த தமது காரில் தொடர்ந்ததாக திரு நாதன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்