கலை ஆர்வலர்கள் குறித்து தேசிய கலை மன்றம் ஆய்வு நடத்தியுள்ளது.
‘பார்வையாளர்களின் மேம்பாட்டுக் கையேடு’ (Audience Development Playbook) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள 235 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 3,000 நபர்களுடன் வீடுகளிலும், சாலைகளிலும் நடத்தப்பட்ட ஆய்வில் கலைகள் பற்றிய தேவைகளும் விருப்பு வெறுப்புகளும் ஆராயப்பட்டன. கலைகள் சமூகத்தையும் அமைப்புகளையும் சார்ந்த 120 பேரிடமும் கருத்தாய்வுகள் நடத்தப்பட்டன.
அதன்படி அவர்கள் 12 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். ஒரு பிரிவினர் மற்றவரைவிட அதிக கட்டணங்கள் செலுத்தி கலைகளை ரசிக்கும் தன்மையுடையவர்கள் என்றும் அதில் அறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆர்வலரின் வயது, குழுந்தைகள் உள்ளனரா, தற்போதைய ஆர்வம், எத்தனை கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர் போன்ற விவரங்கள் ஆராயப்பட்டன. அதிகம் செல்லும் இடங்கள், கலைகளின்மீது உள்ள ஆர்வக் குறியீடு, சமூக ஊடகப் பழக்கவழக்கங்கள் ஆகியன வெளியிடப்பட்டுள்ளன. காண விரும்பாத நிகழ்ச்சிகள் பற்றியும் ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பன்னிரு வகைகளாகப் பிரிக்கப்பட்டோரில் இசை நிகழ்ச்சிகள், வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட வட்டாரங்கள் மீது அதிக நாட்டம் உடையோர் முதலிடம் வகிக்கின்றனர்.
ஆய்வுத்தரவுகளைக் கொண்டு, கலைக் குழுக்கள் உத்திகளை முறையாகக் கையாண்டு, அதிகப் பார்வையாளர்களை ஈர்க்கச் செய்வது இலக்காகும். பன்னிரு பிரிவுகளும் பற்பல விதங்களில் ஆர்வலர்களின் குணங்களைப் பிரதிபலிக்கின்றன.
கலை நிகழ்ச்சிகளைப் ‘பகுத்தாய்ந்து ரசிப்பவர்கள்’ கடை நிலையில் 1.3 விழுக்காடு உள்ளனர். ‘நடைமுறைக்கு ஏற்ற பெற்றோர்’ 15.8 விழுக்காட்டுடனும் ‘அவ்வப்போது ரசிகர்களாக மாறுவோர்’ 16.2 விழுக்காட்டுடனும் முன்னிலையில் உள்ளனர். இந்தப் பிரிவினருக்கு இடையே ‘கலாசாரத்தையும் பழைய நினைவுகளையும் நாடுவோர்’, ‘ஆதரவு நல்கும் பெற்றோர்’, ‘எதைப் பற்றியும் கவலைப் படாத ஆய்வாளர்கள்’, ‘இளையோர்’ போன்ற பலர் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கலையும் கலாசாரமும் வாழ்வில் இன்றியமையாத வகையில் அமையவேண்டும் என்ற நோக்கத்துடன் தேசிய கலை மன்றம் செயலாற்றுகிறது. அதன் அங்கமாக இந்த ஆய்வு நடத்தப்பட்டு கலை அமைப்புகளுக்கு ஆர்வலர்கள் குறித்து முழு விவரங்களை வழங்க விழைகிறது. மக்களுக்கு கலைகள் மீது ஆர்வம் இல்லை என்ற எண்ணத்தைக் களைய ஆய்வு உதவும் என்பதும் நம்பிக்கை.

