இறுக்கப்படும் தேசிய போனஸ் இலக்குகள்; சிங்கப்பூரர்களுக்கு மிக முக்கிய அம்சங்களின் தரம் உயர்கிறது

இறுக்கப்படும் தேசிய போனஸ் இலக்குகள்; சிங்கப்பூரர்களுக்கு மிக முக்கிய அம்சங்களின் தரம் உயர்கிறது

2 mins read
a627deca-1cbf-487e-b27a-99ea8e51b966
இடைநிலை வருமானம் ஈட்டுவோர் மற்றும் 20வது விழுக்காட்டு நிலையில் உள்ள குறைந்த வருவானம் ஈட்டுவோரின் உண்மையான வருமான வளர்ச்சி இலக்கு வரம்புகளை அரசாங்கம் உயர்த்துகிறது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

அமைச்சர்களின் மாறுவிகிதச் சம்பளத்தின் ஒரு பகுதியாக விளங்கும் தேசிய போனசுக்கான இலக்குகள் இறுக்கப்படுகின்றன. இதன் மூலம் சிங்கப்பூரர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களில் அமைச்சர்களுக்கான பணித் தரம் உயர்த்தப்படும் எனப் பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங் செவ்வாய்க்கிழமையன்று ( செப்டம்பர் 8) வெளியிட்ட அறிவிப்பில், இடைநிலை வருமானம் ஈட்டுவோர் மற்றும் 20வது விழுக்காட்டு நிலையில் உள்ள குறைந்த வருமானம் ஈட்டுவோரின் உண்மையான வருமான வளர்ச்சி இலக்கு வரம்புகளை அரசாங்கம் உயர்த்தும் எனக் குறிப்பிட்டார். இதில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கான இலக்கில் அதிக உயர்வு அடங்கும்.

புதுப்பிக்கப்பட்ட இந்தக் கட்டமைப்பின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ள வேறுபட்ட இலக்குகள், பொருளியல் வளர்ச்சியானது குறைந்த வருமானம் ஈட்டுவோரின் நலன்களாகவும் உருவெடுப்பதை உறுதி செய்வதில் அரசாங்கத்துக்கு உள்ள தீவிர கவனத்தைப் பிரதிபலிக்கிறது என்று பகுப்பாய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன், வேலையின்மை விகிதத்திற்கான இலக்கும் இறுக்கப்பட்டுள்ள நிலையில், சிங்கப்பூரின் பொருளியல் முதிர்ச்சியடைவதற்கேற்ப அதன் வளர்ச்சி மெதுவாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பைப் பிரதிபலிக்கும் வகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இலக்கு குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு குறியீடுகளே தேசிய போனசின் தொகையைத் தீர்மானிக்கின்றன. இதன் அளவு பூஜ்ஜியம் முதல் மொத்தம் ஆறு மாதங்கள் வரையிலான சம்பளத்தைக் குறிக்கும். அனைத்துக் குறியீடுகளின் இலக்கு அளவுகளையும் முழுமையாக அடையும்போது, மூன்று மாதச் சம்பளத்துக்கு நிகரான தேசிய போனஸ் தொகையாக வழங்கப்படும்.

“இந்த இறுக்கப்பட்ட குறியீடுகள் அமைச்சர்களின் செயல்திறன் தரத்தை மேலும் வலுப்படுத்தலாம். இதன் மூலம் மேக்ரோ குறியீடுகளில் மட்டுமல்லாது, குறைந்த வருமானம் ஈட்டும் சிங்கப்பூரர்களின் நலன்சார்ந்த குறியீடுகளிலும் அமைச்சர்கள் உயர் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டிய சூழல் ஏற்படும்,” என்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் லீ குவான் யூ பொதுக் கொள்கைப் பள்ளியின் சிறப்புப் பேராசிரியர் ஆரோன் மணியம் தெரிவித்தார்.

குறைந்த வருவானம் ஈட்டும் சிங்கப்பூரர்களுக்கான வருமான வளர்ச்சி இலக்கு உயர்த்தப்பட்டது, தேசிய போனஸ் கட்டமைப்பில் செய்யப்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாகும் என்றும் பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.

புதிய மாற்றங்களின்படி, 20வது விழுக்காட்டு நிலையில் உள்ள குறைந்த வருமானம் ஈட்டுவோரின் உண்மையான வருமான வளர்ச்சி இலக்கு, தற்போதைய இரண்டு முதல் மூன்று விழுக்காட்டுக்குக்கீழ் என்ற நிலையிலிருந்து மூன்று முதல் நான்கு விழுக்காட்டுக்குக்கீழ் என்பதாக உயர்த்தப்படும். அதேவேளையில், இடைநிலை வருமானம் ஈட்டுவோருக்கான இலக்கு இரண்டு முதல் மூன்று விழுக்காட்டுக்குக் கீழ் என்பதில் இருந்து 2.5 முதல் 3.5 விழுக்காட்டுக்குக்கீழ் என உயர்த்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
போனஸ்சம்பளம்வசதி குறைந்த