வீ. பழனிச்சாமி, இணை ஆசிரியர்
சிங்கப்பூர் தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், அரசாங்கம் இவ்வாண்டுக்கான தேசிய தின விருதுகளைப் பெறுவோரின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சிறந்த முறையில் தங்கள் பங்கை வெளிப்படுத்திய மொத்தம் 7,210 பேர் தேசிய தின விருதுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
அவர்களில் 6,460 பேர் பொதுத் துறையையும் 750 பேர் ராணுவத்தையும் பிரதிநிதிக்கிறார்கள். இவர்களில் 65 இந்தியர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருது பெறுவோர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் சாங்கி விமான நிலையக் குழுமத்தின் முன்னாள் தலைவர் திரு டான் கீ பாவ். அவருக்கு நாட்டின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் நீல உத்தமா’ அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த நிலையில், சிறப்புமிக்க சேவை விருது (The Distinguished Service Order) பெறுகிறார் சிங்கப்பூர் அணு ஆராய்ச்சி & பாதுகாப்புக் கழகத்தின் தலைவரான பேராசிரியர் லுயி பாவ் சுவேன்.
பாராட்டுப் பணிப் பதக்கத்தை (The Meritorious Service Medal) 12 பேர் பெறுகின்றனர். அவர்களில் நால்வர் இந்தியர்கள். அவர்களில் ஒருவர் பிரதமர் அலுவலகத்தின் துணைச் செயலாளர் திரு ஜனதாஸ் தேவன்.
திரு ஜனதாஸ் தேவன் 2012 முதல் சிங்கப்பூருக்கு சிறப்பான சேவை செய்து வருகிறார். வளமான பத்திரிகை அனுபவத்தையும், பல இன தேசமாக சிங்கப்பூரின் வளர்ச்சியைப் பற்றிய ஆழமான புரிதலையும் கொண்டு வந்தார். சிங்கப்பூரின் முதல் அரசு தகவல் தொடர்புத் தலைவராகவும், பிரதமர் அலுவலக துணைச் செயலாளராகவும், 24 மணிநேர தேசிய செயல்பாட்டு மையத்தை நிறுவுவதன் மூலமும், முழு அரசு ஒருங்கிணைப்பு மூலமும் பொதுத்துறை தகவல் தொடர்புகளை மாற்றினார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
அந்த வரிசையில் உள்ள மற்றொருவர் ‘பேவ்’ எனப்படும் வன்முறைக்கு எதிரான மாற்றுவழிகளை ஊக்குவிக்கும் நிலையத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் சுதா நாயர். சமூகப் பணிகளில் அரும்பணியாற்றியதற்காகவும், வன்முறையிலிருந்து குடும்பங்களை விடுவிப்பதற்கான அயராத உழைப்புக்காகவும் டாக்டர் சுதாவுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
மூத்த வழக்கறிஞரும் சிங்கப்பூர் அனைத்துலக நடுவர் மையத்தின் தலைவருமான திரு தவிந்தர் சிங்குக்கும் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கப்படுகிறது. “அரசாங்கம், நீதித் துறை, நாடாளுமன்றம் ஆகியவற்றின் மிகப் பெரிய ஆதரவுடன் இயங்கும் நடுவர் மையம் அனைத்துலக நீதியில் பெரிதும் மதிக்கப்பட்டு வருகிறது. அத்தகைய அமைப்புக்குத் தலைமையேற்று செயல்படுவதில் நான் பெருமைப்படுகிறேன்,” என்றார் திரு சிங்.
பாராட்டுப் பணிப் பதக்கம் பெறும் மற்றொருவரான தேசிய குற்றத்தடுப்பு மன்றத்தின் தலைவர் திரு ஜெரால்ட் பாலேந்திரன் சிங்கம், “இந்த விருது தனிப்பட்ட அங்கீகாரம் அல்ல. கடந்த 24 ஆண்டுகளாக தேசிய குற்றத்தடுப்பு மன்றத்தில் பணியாற்றிய பலரின் கூட்டு முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும்,” என்று தெரிவித்தார்.
வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்தில் கடந்த 23 ஆண்டுகளாக உறுப்பினராக சேவையாற்றி வரும் திரு ஆர். சந்திரமோகனுக்கு பொதுச் சேவை நட்சத்திரம் (பார்) விருது கிடைத்துள்ளது. “மற்றவர்களுக்கு உதவக்கூடிய சேவையில் இருப்பதை ஒரு பெரிய ஆசீர்வாதமாகக் கருகிறேன்,” என்றார் திரு சந்திரமோகன்.
இயூ டீ குடிமக்கள் ஆலோசனைக் குழுவில் கடந்த 35 ஆண்டுகளாகச் சேவையாற்றி வரும் திரு சி. மனோகரன், பொதுச் சேவை நட்சத்திர விருது பெறுகிறார். “இந்த விருதைப் பெறுவதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். தன்னார்வத் தொண்டு என்பது எனக்கு ஒருபோதும் அங்கீகாரத்தைப் பற்றியதாக இருந்ததில்லை. மக்களுக்கும் சமூகத்துக்கும் என்னால் முடிந்ததைச் செய்து வருகிறேன்,” என்று ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆலோசகருமான திரு மனோகரன் கூறினார்.
பொது ஆட்சித்துறை வெண்கலப் பதக்கத்தை (The Public Administration Medal (Bronze) பெறுவோரில் ஒருவர் கல்வி அமைச்சின் தாய்மொழிகள் துறை, பாடக்கலைத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவு (1), தமிழ்மொழி வழிகாட்டு சிறப்பாய்வாளர் திருமதி சீதாலட்சுமி தனபாலன். “மதிப்பிற்குரிய இந்த தேசிய தின விருது, கல்வித்துறைக்கும் நாட்டுக்கும் தொடர்ந்து நேர்மையுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் சேவையாற்றுவதற்குரிய எனது உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது,” என்று திருமதி சீதாலட்சுமி கூறினார்.
அதே விருதைப் பெறும் இன்னொருவர் கல்வி அமைச்சின் சிங்கப்பூர் ஆசிரியர் கலைக்கழகத்தின் முதன்மை ஆசிரியர் திருமதி பிரேமலதா கோபாலகிருஷ்ணன். “இந்த விருதை, என்னை ஒரு கல்வியாளராக ஊக்குவித்த எனது மறைந்த பெற்றோருக்கு அர்ப்பணிக்கிறேன். மாணவர்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் எனது பணிக்கு உறுதுணையாக இருந்த என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நன்றி. வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் கற்பித்தல் மீதான எனது உறுதிப்பாட்டை இந்த விருது உறுதிப்படுத்துகிறது,” என்று கருத்துரைத்தார் திருமதி பிரேமலதா.
கல்வி அமைச்சின் தாய்மொழிகள் துறை, பாடக்கலைத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவு (1), தமிழ்மொழி உதவி இயக்குநர் திரு மோகன் சுப்பையா, பாராட்டுப் பதக்கம் (The Commendation Medal) பெறுகிறார். “கல்வித்துறையில் கடந்த 17 ஆண்டுகாலம் சேவையாற்றி வரும் எனக்கு இந்த விருது, தமிழ்மொழி கற்றல், கற்பித்தலை மேம்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட அனைத்து முயற்சிகளையும் அங்கீகரிக்கும் வண்ணம் அமைகிறது. இது தொடர்ந்து கல்வித்துறையில் புத்தாக்கத்தையும், கல்வித் தொழில்நுட்பத்தையும் அர்த்தமுள்ள வகையில் இணைத்துக் கற்பிக்க வேண்டும் என்ற எனது கடப்பாட்டை வலுப்பெறச் செய்கிறது,” என்று தெரிவித்தார்.
தேசிய தின விருது பெறுவோரின் முழுப் பட்டியல் விவரத்தை இந்த இணையப் பக்கத்தில் பார்வையிடலாம். https://www.pmo.gov.sg/national-day-awards ”