தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மரினா பே வரை நீளும் தேசிய தினக் கொண்டாட்டம்

2 mins read
b14c1576-2703-494a-bdeb-ff089f77d9a6
இவ்வாண்டு தேசிய தினக் கொண்டாட்டங்களில் ஏறத்தாழ 200,000 மக்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முதன்முறையாக பாடாங்கிலிருந்து மரினா பே வட்டாரம் வரை நீளும் இவ்வாண்டு தேசிய தினக் கொண்டாட்டங்களில் ஏறத்தாழ 200,000 பேர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாடாங்கில் நடைபெறும் தேசிய தின அணிவகுப்பு, கொண்டாட்டங்களை ஆகஸ்ட் 2 மற்றும் 9ஆம் தேதிகளில் மரினா பே வட்டாரத்தில் மக்கள் நேரலையாக கண்டு மகிழலாம் .

தேசிய தினக் கொண்டாட்டங்கள் நேரலையாக மெர்லயன் பூங்கா, மரினா பே சேண்ட்ஸ் நிகழ்ச்சி வளாகம், எஸ்பிளனேட் வெளிப்புறக் கலையரங்கு ஆகிய இடங்களில் திரையிடப்படும்.

பாடாங்கில் நடைபெறும் கொண்டாட்டங்கள் மரினா பே வட்டார நேரலைகளுடன் ஒத்திசைக்கப்படும். கொண்டாட்டங்களை மெருகூட்ட கட்டட ஒளிப்படைப்புகள், வாணவேடிக்கைகள் மரினா பே வட்டாரத்திலும் மிளிரவுள்ளன.

“பாடாங், மரினா பே பகுதிகளிலுள்ள பார்வையாளர்கள் ஒரே அனுபவத்தின்வழி ஒன்றிணைந்து தேசிய தின உணர்வைப் பகிர்ந்து, கொண்டாட விரும்புகிறோம்,” என்றார் மரினா பே கொண்டாட்ட அமைப்பின் செயலாளர் மேஜர் வேணு நாயுடு.

மாலையில் நடைபெறும் தேசிய தினக் கொண்டாட்டங்களுக்குமுன் பொதுமக்களுக்கு ‘பே டிஸ்கவரி வழித்தடம்’ (Bay Discovery Trail) எனும் தேசிய தின சிறப்புப் பட்டறைகள், நடவடிக்கைகள், இசை அங்கங்கள் கொண்ட அனுபவம் காத்திருக்கிறது. அவை மூன்று பிரிவுகளாக மரினா பே நீர்முகப்புப் பகுதியில் நடைபெறும்.

இவ்விரு நாள்களிலும் ‘பே டிஸ்கவரி வழித்தடம்’ அனுபவத்தை முடிக்கும் முதல் 5,000 பேருக்கு இலவச தேசிய தின அன்பளிப்புப் பை கிடைக்கும்.

என்டியுசி, சாஃப்ரா, கரையோரப் பூந்தோட்டங்கள், பியுபி, ‘காலாங் அலைவ்’ விளையாட்டு நிர்வாகம் ஆகியவை இணைந்து மரினா பே வட்டாரத்தைச் சுற்றியுள்ள ஐந்து இடங்களில் தனிப்பட்ட தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

மரினா பே கடல்முனை (The Promontory), பேஃபிரண்ட் நிகழ்ச்சித் திடல் (Bayfront Event Space), கரையோரப் பூந்தோட்டங்களின் ஆகப்பெரிய வெளிப்புறப் பூங்கா வெளியான ‘த மெடோ’ (The Meadow at Gardens by the Bay), மரினா அணைக்கட்டு (Marina Barrage), சிங்கப்பூர் விளையாட்டு நடுவம் (Singapore Sports Hub) ஆகியவையே அந்த ஐந்து இடங்கள்.

மரினா பே வளாகத்தில் கூட்ட நெரிசலை எதிர்கொள்ள பொதுமக்கள் தங்களுக்கு மிகவும் தேவையான பொருள்களை மட்டும் எடுத்துக்கொண்டு பயணம் செய்யவும், அதிகமான பயண நேரத்தை எதிர்பார்க்குமாறும் சிங்கப்பூர் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வோர் ராஃபிள்ஸ் பிளேஸ், எஸ்பிளனேட், புரொமனாட், பே ஃபிரண்ட், மரினா பே அல்லது டௌன்டவுன் பெருவிரைவு நிலையங்கள் வழியாக வருமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மூடப்படும் சாலை, நடைபாதைகள், கூட்ட நெரிசல் பற்றிய நிகழ்நேரத் தகவல்களுக்கு பொதுமக்கள் கியூஆர் குறியீடுகள் மூலம் இணையத் தகவல் தளம் ஒன்றை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்