பின்னணியில் உழைக்கும் கரங்களால் தேசிய தினக் கொண்டாட்டம் சாத்தியம்: சான்

பின்னணியில் உழைக்கும் கரங்களால் தேசிய தினக் கொண்டாட்டம் சாத்தியம்: சான்

2 mins read
1d6863e0-2ed1-4099-a00e-8f04ea121944
புவனா விஸ்தா தேசிய தினப் பற்றுறுதிச் சடங்கில் சிறுவர்கள், குடியிருப்பாளர்களுடன் இணைந்து கேக் வெட்டி மகிழ்ந்தார் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பின்னணியில் அமைதியாக உழைக்கும் சிங்கப்பூரர்களாலேயே நாடு தொடர்ந்து தேசிய தினத்தைக் கொண்டாட முடிகிறது என்று தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

புவன விஸ்தா தேசிய தினப் பற்றுறுதிச் சடங்கில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) பேசிய அவர், நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சீருடைப் படையினர், அத்தியாவசியப் பொருள்களுக்குப் பொறுப்பேற்கும் பொருளியல் துறையினர், சமூகத்தை ஒருங்கிணைக்கும் அடித்தள அமைப்பினரின் சேவையைப் பாராட்டினார்.

போர்ச் சூழலால் உணவு, எரிசக்தி விநியோகத்தில் இடையூறுகள் நிலவினாலும், சிங்கப்பூரின் பாதுகாப்பையும் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்தையும் எவரும் பாதிக்காததை உறுதிசெய்ய அரசு தொடர்ந்து பாடுபடும் என்று பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான அவர் உறுதிபடக் கூறினார்.

அனைத்து இன மக்களும் இணைந்து இளைய தலைமுறையினருக்குச் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

புளோக் 2 ஹாலந்து அவென்யூவில் நடந்த பற்றுறுதிச் சடங்கில் திரு சானுடன் ஏறக்குறைய 500 குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

புவன விஸ்தா அடித்தள அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில், கேக் வெட்டும் நிகழ்வு, பாடல் அங்கங்கள், கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு சமூக நடவடிக்கைகள் இடம்பெற்றன.

குறிப்பிடும்படியாக, 61 குடியிருப்பாளர்களின் புகைப்படங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பு ஒன்றும் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

“இந்த 61 புகைப்படங்களில் ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான கதையைக் கூறுகிறது. ஆனால், அவை அனைத்தும் ஒன்றாக இணைந்து நாம் பெருமைப்படும் சிங்கப்பூரைப் பிரதிபலிக்கின்றன.

“பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒன்றிணைந்து ஒரு பொதுவான இல்லத்தை உருவாக்கி, ஒருவரையொருவர் கவனித்துக்கொள்ளும் இடமாக இது விளங்குகிறது,” என்றார் திரு சான்.

குறிப்புச் சொற்கள்
தேசிய தினம் 2026சான் சுன் சிங்சிங்கப்பூர்