வெளிநாடுகளில் களைகட்டவிருக்கும் தேசிய தினக் கொண்டாட்டம்

2 mins read
0e0a9dc9-ea1c-4117-8ff1-3294f8a63760
சிங்கப்பூர்கன்னெக்ட் அமைப்பைத் தோற்றுவித்த ஜெஸ்மின் யங் (முன், சாம்பல் நிற சட்டை) இதர சிங்கப்பூரர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார். - படம்: ஜெஸ்மின் யங்

சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளைக் கொண்டாட அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ பே வட்டாரத்தில் சிங்கப்பூரைப் பிரதிபலிக்கும் அம்சங்களை உருவாக்கும் முயற்சியில் வெளிநாட்டில் வாழும் சிங்கப்பூரர்கள் இறங்கியுள்ளனர்.

“60 ஆண்டுகால சகாப்தம்’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சியை சான் ஃபிரான்சிஸ்கோ பே வட்டாரத்தில் செப்டம்பர் 21ஆம் தேதி அவர்கள் நடத்தவிருக்கின்றனர்.

சிங்கப்பூர்கன்னெக்ட் (SingaporeConnect) என்ற ஒரு குழுவால் அது ஏற்பாடு செய்யப்படுகிறது.

லாப நோக்கமற்ற அந்த அமைப்பைச் சேர்ந்த தொண்டூழியர்கள், பே வட்டாரத்தில் சிங்கப்பூரர்களுக்காக சமூக, கலாசார நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபரில் திட்டமிடுதல் தொடங்கியது. அதன் விளைவாக சிங்கப்பூரர்களுக்கும் சிங்கப்பூர் அல்லாதோருக்கும் ஒன்றாக ஒரு நாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஏற்பாட்டுக் குழுத் தலைவர்களில் ஒருவரான திரு ரிச்சர்ட் சான், 52, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

11 பேர் கொண்ட குழு ஆர்வத்துடன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறது என்றார் திரு சான்.

கிட்டத்தட்ட 150 தொண்டூழியர்களுடன் 3,000 பேர் வரை நிகழ்ச்சிக்கு வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“சிங்கப்பூர் எப்படிப்பட்டது, சிங்கப்பூரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை வெளிப்படுத்த இந்த நிகழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்,” என்று கூறினார் ஏற்பாட்டுக் குழுவின் மற்றொரு தலைவரான திருவாட்டி தபித்தா சீ, 54.

திருவாட்டி சீயின் குடும்பத்தார் கண்காட்சியில் வைப்பதற்காக சிங்கப்பூரைப் பிரதிபலிக்கும் படங்களைச் சேகரிக்க சிங்கப்பூர் வந்தனர்.

சிங்கப்பூர்கன்னெக்ட் அமைப்பு, சிங்கப்பூர் குளோபல் நெட்வர்க் (Singapore Global Network) என்ற அமைப்பிடம் நிகழ்ச்சிக்கான நிதியைப் பெற முற்பட்டது.

சிங்கப்பூர்கன்னெக்ட் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி, தேசிய தினத்தை முன்னிட்டு உலகளவில் ஏற்பாடு செய்யும் 30க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று.

ஆஸ்திரேலியா, சீனா, சவூதி அரேபியா, பிரிட்டன் ஆகிய பல்வேறு நாடுகளில் சிங்கப்பூரின் தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தற்காப்பு அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்