ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான டான் கியட் ஹாவ் மூன்றாவது முறையாகத் தந்தையாகியிருக்கிறார்.
தேசிய தினத்துக்கு மறுநாளான திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) அவரின் மூன்றாவது குழந்தை பிறந்தது. தேசிய தின அணிவகுப்பின்போது அவரது மனைவிமனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவற்றுக்கான மூத்த துணை அமைச்சருமான திரு டான், மிக்கா என்று பெயரிடப்பட்டுள்ள தமது மூன்றாவது குழந்தை திங்கட்கிழமை காலை பிறந்ததாக ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.
தேசிய தின அணிவகுப்புக்குப் பிறகு மனைவியைத் தாம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக அவர் கூறினார். தமது மற்ற இரு பிள்ளைகளான ஐசேக், அய்லா ஆகியோரை வீட்டில் விடவும் நேரம் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
“ஐசேக், அய்லா இருவரும் வாணவேடிக்கை, பற்றுறுதி உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் கண்டுகளிக்கும் வரை குழந்தை ‘காத்துக்கொண்டிருந்ததில்’ மகிழ்ச்சி.
“தமது குடும்பத்தின் ஆகப் புதிய உறுப்பினரை வரவேற்கிறோம். மிகவும் நன்றியுடனும் ஆசிகளைப் பெறும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறோம்,” என்றார் திரு டான். தமது மனைவியையும் புதிதாகப் பிறந்த மகனையும் கவனித்துக்கொண்ட மருத்துவக் குழுவுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
“இதுவே ஆகச் சிறந்த தேசிய தினப் பரிசாகும்,” என்றும் அவர் சொன்னார்.


