தேசிய தின அணிவகுப்பு 2026: நுழைவுச்சீட்டுகளுக்கு மே 23 - ஜூன் 6 விண்ணப்பிக்கலாம்

தேசிய தின அணிவகுப்பு 2026: நுழைவுச்சீட்டுகளுக்கு மே 23 - ஜூன் 6 விண்ணப்பிக்கலாம்

2 mins read
b71f197f-a202-481d-a233-6ec71cbea60c
தேசிய தின அணிவகுப்பு 2026, கிட்டத்தட்ட 42,000 பேர் அமரக்கூடிய தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. - படம்: எஸ்பிஎச் மீடியா

தேசிய தின அணிவகுப்பு 2026ஐயும் முன்னோட்ட நிகழ்ச்சிகளையும் காண்பதற்குரிய நுழைவுச்சீட்டுகளைப் பெறுவதற்குச் சனிக்கிழமை (மே 23) முதல் அடுத்த மாதம் (ஜூன்) 6ஆம் தேதி நண்பகல் 12 மணிவரை விண்ணப்பிக்கலாம்.

சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் இரண்டு, நான்கு அல்லது ஆறு நுழைவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

அனைத்து விண்ணப்பங்களும் சிங்பாசைப் பயன்படுத்தி ndp.gov.sg என்ற இணையத்தளத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 2024ஆம் ஆண்டிலிருந்து அந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

தேசிய மின்னிலக்க அடையாளத் தளம் வசதியாக இருக்கிறது என்றும் மோசடிகளைத் தவிர்க்க உதவுகிறது என்றும் கூறப்பட்டது.

தேசிய தின அணிவகுப்பு 2026 நிர்வாகக் குழு, வெள்ளிக்கிழமை (மே 22) அதனைத் தெரிவித்தது.

முந்திய ஆண்டுகளைப் போலவே, நுழைவுச்சீட்டுகள் குலுக்கின் மூலம் கொடுக்கப்படும். முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அவை தரப்படமாட்டாது.

குலுக்கில் பங்கெடுக்க ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். ஒரு நுழைவுச்சீட்டைப் பயன்படுத்தி ஒருவர் மட்டுமே செல்லமுடியும்.

தேசிய விளையாட்டரங்கில் நுழைவதற்குக் குழந்தைகள் உட்பட அனைத்துப் பிள்ளைகளுக்கும் முறையான நுழைவுச்சீட்டு அவசியம். தேசிய தின அணிவகுப்பு, 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்கு முதன்முறையாக நடைபெறவிருக்கிறது.

தேசிய விளையாட்டரங்கில் ஏறக்குறைய 42,000 பேர் அமர்ந்து அணிவகுப்பைப் பார்க்கலாம். பாடாங்கைப் போன்று அது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு. அங்குதான் தேசிய தின அணிவகுப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பு, நடைமுறைக் காரணங்களால், இவ்வாண்டு அணிவகுப்பில் சில அங்கங்கள் இடம்பெறமாட்டா என்று நிர்வாகக் குழு வியாழக்கிழமை கூறியிருந்தது.

நுழைவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பம் செய்தோருக்கு gov.sg இணையத்தளம் மூலம் குறுந்தகவல் அல்லது info@ plumber.gov.sg முகவரியின்வழி மின்னஞ்சலில் அது கிடைத்ததற்கான தகவல் தெரிவிக்கப்படும்.

நுழைவுச்சீட்டுகளை வெற்றிகரமாகப் பெறுவோருக்கு அடுத்த மாதம் 15ஆம் தேதிக்கும் 17ஆம் தேதிக்கும் இடையில் அதுபற்றித் தெரியப்படுத்தப்படும்.

அவர்களுக்கு gov.sg இணையத்தளம் மூலம் குறுந்தகவல் அல்லது info@ mail.postman.gov.sg முகவரியின்வழி மின்னஞ்சலில் அதுகுறித்துத் தகவல் தெரிவிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்