தேசிய தினத்திற்கு முந்தைய சனிக்கிழமைகளில் காலாங் பகுதிக்குச் செல்பவர்கள், இந்த ஆண்டின் தேசிய தின அணிவகுப்புக்கான ஒத்திகைகளை மட்டும் பார்ப்பதோடு நின்றுவிடாமல், மேலும் பல சிறப்பம்சங்களையும் எதிர்பார்க்கலாம்.
சிங்கப்பூர் அதன் 61வது பிறந்தநாளை ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய விளையாட்டரங்கில் கொண்டாடவுள்ளது.
ஏற்பாட்டாளர்கள் அணிவகுப்பு நடைபெறும் இடத்துக்கு அப்பாலும் கொண்டாட்டங்களைக் கொண்டுசெல்ல உள்ளனர்.
தேசிய தின அணிவகுப்பின் தொகுப்பில் உள்ள பாடல்கள் அடங்கிய நேரடி இசை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், நடன நிகழ்ச்சிகள் ஆகியவை தேசிய விளையாட்டரங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும்.
தேசியக் கொடியை ஏந்திய ஹெலிகாப்டர்கள் பறந்துசெல்லும் அங்கம், அதிபருக்கான மரியாதைக் குண்டு முழக்கம் ஆகியவை ஆகஸ்ட் 9ஆம் தேதி மட்டுமே நடைபெறும். அவற்றைத் தவிர, மற்ற நடவடிக்கைகள் அனைத்தும் ஜூலை 25, ஆகஸ்ட் 1, ஆகஸ்ட் 9 ஆகிய நாள்களிலும் நடைபெறும்.
‘ஸ்டேடியம் ரிவர்சைட் வாக்’ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் அலங்காரக் காட்சி, விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அமையும்.
‘தொடுவானம் நோக்கி, முன்னேறட்டும் சிங்கப்பூர்!’ எனும் இவ்வாண்டின் கருப்பொருளை மையமாகக் கொண்டு, பார்வையாளர்கள் புகைப்படங்களை எடுத்து மகிழும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த அலங்காரக் காட்சி, ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 9 வரை தினமும் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டிருக்கும்.
‘டிஃபென்ஸ் கலெக்டிவ் சிங்கப்பூர்’ வழங்கும் ‘மாஜுலா பகுதி’, தேசிய உறுதிமொழியின் 60ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில், அதன் வரலாறு, தற்போதைய முக்கியத்துவத்தைக் விளக்கும் கண்காட்சியைக் கொண்டிருக்கும்.
பார்வையாளர்கள் இருவழித் தொடர்பு நடவடிக்கைகளில் பங்கேற்கலாம்; சிறப்புக் கருப்பொருளிலான புகைப்படச் சாவடியில் புகைப்படமும் எடுத்துக்கொள்ளலாம்.
அந்தப் பகுதி விளையாட்டு நிலையத்தில் ஜூலை 25, ஆகஸ்ட் 1, ஆகஸ்ட் 9ஆம் தேதிகளில், பிற்பகல் 3 மணிமுதல் இரவு 9.30 மணிவரை திறந்திருக்கும்.
‘வீ பர்ஃபோர்ம், வீ கோ பியோண்ட்’ (WE Perform, WE Go Beyond) என்ற தலைப்பிலான சிறப்புக் கலைநிகழ்ச்சி, பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த கலைஞர்களின் நேரடி இசை, நடன நிகழ்ச்சிகளைக் கொண்டிருக்கும்.
அந்த நிகழ்ச்சிகள் ஜூலை 25, ஆகஸ்ட் 1, ஆகஸ்ட் 9ஆம் தேதிகளில் மாலை 4 மணிமுதல் 6 மணிவரை காலாங் வேவ் கடைத்தொகுதியின் முதல்தளத்தில் நடைபெறும்.

