இந்த ஆண்டின் தேசிய தின அணிவகுப்புக்கான நன்றி உபசரிப்பு நிகழ்ச்சி தேசிய விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28)நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னமும் அவரது மனைவி திருமதி ஜேன் இட்டோகியும் தேசிய தின அணிவகுப்பின் செயற்குழு உறுப்பினர்கள், அணிவகுப்புப் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடி வாழ்த்து தெரிவித்தனர்.
‘ஷியோக் சிஸ்டாஸ்’ (Shiok Sistas) குழுவுடன் இணைந்து கலைநிகழ்ச்சி படைத்த அனிதா அய்யாவு, பிப்ரவரி மாதத்தில் குறும்படத்துடன் தமது பயணத்தைத் தொடங்கி, ஜூலை முதல் தேசிய தின அணிவகுப்பு வரை வாராந்தரப் பயிற்சிகளில் தீவிரமாகப் பங்கேற்றார். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளராகப் பணியாற்றும் இவர், மீடியாகார்ப் நிகழ்ச்சிகளிலும் கலைப்படைப்புகளிலும் பங்களித்து வருகிறார்.
“6 வயதாக இருந்தபோது முதன்முதலில் தேசிய தின அணிவகுப்பைப் பார்த்தது இன்னும் நினைவிருக்கிறது. சிறு வயதில் இருந்த அதே உற்சாகம் இன்னும் தொடர்கிறது. நாட்டிற்காக நிகழ்ச்சியில் பங்களிக்க வாய்ப்பு கிடைத்தபோது தயங்காமல் ஒப்புக்கொண்டேன். தொழிலில் சிறப்பாகச் செயல்பட சிங்கப்பூர் எனக்குப் பல வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இந்த நிலைக்கு என்னை வளர்த்து ஆளாக்கிய இந்த நாட்டிற்காக இதைச் செய்ய விரும்பினேன்,” என்று அனிதா கூறினார்.
“நான் தேசிய தின அணிவகுப்பில் பாடியபோது என் கண்கள் கலங்கின, அது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஓர் உணர்வு,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் தகவல் தொடர்பு வடிவமைப்புப் பிரிவில் படிக்கும் 17 வயது முகம்மது டேனியல் பின் அப்துல்லா, அணிவகுப்புப் பிரிவில் சாரணராகப் பங்கேற்றார்.
“இதில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு, தேசிய தின அணிவகுப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது,” என்றார் டேனியல்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் நிதித் துறையில் பயிலும் 20 வயது திவ்யா மத்தில்டாவும் தேசிய தின அணிவகுப்பு 2026ல் பங்கேற்றார். சிங்கப்பூரின் 21 வயதிற்குட்பட்டோருக்கான வலைப்பந்து அணியின் விளையாட்டாளரான அவர், தம் அணியுடன் கடந்த ஆண்டு ஆசிய இளையர் கிண்ணப் போட்டியில் வெற்றி பெற்றார். அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்திச் சென்ற அனுபவத்தை நினைவுகூர்ந்து அவர் பெருமைப்பட்டார்.
“மக்கள் கூட்டத்தின் முன்னால் கொடி ஏந்தி ஓடியது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. அரங்கத்தில் கூடியிருந்தோரின் நாட்டுப்பற்றை என்னால் உணர முடிந்தது,” என்றார் திவ்யா.


