இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்புப் பைகள் ஏழு வடிவமைப்புகளில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்குறையுள்ள 41 ஓவியர்களின் கைவண்ணத்தில் அவை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓவியர்கள் 10 வயதுக்கும் 73 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
சிங்கப்பூர் தொடர்பாகத் தங்கள் விருப்பங்கள், நாட்டின் பயணம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை அவர்களது படைப்புகள் பறைசாற்றுகின்றன.
பன்முக கலாசாரம், மீள்திறன், வெளிப்படைத்தன்மை, துணிவு ஆகியவை தேசிய தின அணிவகுப்புப் பைகள் கொண்டுள்ள கருப்பொருள்களில் நான்கு.
இந்தக் கருப்பொருள்களை 20 வயதுக்கும் 73 வயதுக்கும் இடைப்பட்ட 21 ஓவியர்கள் உருவாக்கினர்.
அவர்கள் ART:DIS எனும் லாப நோக்கமற்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
உடற்குறையுள்ளோருக்குக் கலைத்துறையில் வாய்ப்புகளை உருவாக்குவதே இந்த அமைப்பின் இலக்கு. எஞ்சியுள்ள 20 ஓவியர்கள் சிறப்புக் கல்விப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள். அவர்கள் 10 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு எஸ்ஜிஎனேபல் அறநிறுவனம் ஆதரவு வழங்குகிறது. சிங்கப்பூரில் உடற்குறையுள்ளோரை சமூகத்துடன் இணைக்க இந்த அறநிறுவனம் செயல்படுகிறது.
பரிவு, பங்களிப்பு, எதிர்காலம் ஆகிய கருப்பொருள்களை அவர்கள் தங்கள் படைப்புகளில் பயன்படுத்தியுள்ளனர். இந்தத் தகவல்களை தேசிய தின அணிவகுப்பு ஏற்பாட்டாளர்கள் திங்கட்கிழமை (ஜூன் 9) வெளியிட்டனர். பைகளின் வடிவமைப்புகள் செய்தியாளர்களிடம் முதன்முறையாகக் காண்பிக்கப்பட்டது.
அணிவகுப்பைக் காண வருபவர்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க பைகளுக்குள் பல்வகை உணவுப்பொருள்கள் இருக்கும் என்று தேசிய தின அணிவகுப்பு 2025 பைகள் தொடர்பான குழுவின் தலைவர் மேஜர் டெஸ்மண்ட் லிம் தெரிவித்தார்.
அவற்றுடன் பல்வேறு இருவழித் தொடர்புச் சாதனங்களும் பைகளில் இருக்கும் என்றார் அவர். மறுசுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டரைக் கொண்டு பைகள் தயாரிக்கப்படுகின்றன.
தேசியக் கல்வி நிகழ்ச்சிகள், தேசிய தின அணிவகுப்பு முன்னோட்ட நிகழ்ச்சிகள், தேசிய தின அணிவகுப்பு ஆகியவற்றில் பங்கேற்போருக்கு இந்தப் பை வழங்கப்படும்.