தேசிய தின அணிவகுப்பு நுழைவுச்சீட்டு தொடர்பாக ஜூலை 1ஆம் தேதி முதல் இதுவரை ஐந்து மோசடிப் புகார்கள் பதிவாகி உள்ளன.
அந்த இணைய வர்த்தக மோசடியில் சிக்கியோர் ஏறத்தாழ $250 பணத்தை இழந்துள்ளனர். டெலிகிராம் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் வெளியிடப்பட்ட நுழைவுச்சீட்டு விற்பனைப் பட்டியலைப் பயன்படுத்தி அவர்கள் ஏமாந்ததாகக் காவல்துறை வியாழக்கிழமை (ஜூலை 31) கூறியது.
நுழைவுச்சீட்டுகளை வாங்கும் ஆர்வத்தில் அத்தகைய பட்டியலைப் பயன்படுத்தியோர் ‘பேநவ்’ (PayNow) வழியாகப் பணம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
பணம் செலுத்திய பின்னர் நுழைவுச்சீட்டு கிடைக்காமல் போன பின்னரே தாங்கள் மோசடி செய்யப்பட்டதாக அவர்கள் உணர்ந்தனர். பணத்தை நூதனமாகப் பறித்த மோசடிக்காரர்களை அதன் பிறகு தொடர்புகொள்ள இயலவில்லை.
தேசிய தின அணிவகுப்பைக் காண்பதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை செய்யப்படுவதில்லை. சிங்பாஸ் செயலியைப் பயன்படுத்தி நடத்தப்படும் குலுக்கில் பங்கேற்று அதனை இலவசமாகப் பெறலாம்.
அவ்வாறு இலவசமாகப் பெற்ற நுழைவுச்சீட்டை விற்பனை செய்யக்கூடாது.
தேசிய தின நுழைவுச்சீட்டுகளை மோசடி செய்யும் நோக்கத்துடன் பயன்படுத்துவோருக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர் என தேசிய தின அணிவகுப்புக்கான நிர்வாகக் குழு தெரிவித்து உள்ளது.
அங்கீகரிக்கப்படாத வழிகளில் பெறப்படும் நுழைவுச்சீட்டுகள் செல்லாது என்றும் அணிவகுப்பைக் காண அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் காவல்துறை விளக்கி உள்ளது.