தேசிய தின அணிவகுப்பு: முன்னதாகவே வரப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

தேசிய தின அணிவகுப்பு: முன்னதாகவே வரப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

2 mins read
d077c8ef-91d1-435e-8c89-96dff3001dd7
தேசிய தின அணிவகுப்பை முன்னிட்டு, தேசிய விளையாட்டரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் சிறப்பு நிகழ்வு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பு ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய விளையாட்டரங்கத்திலும் அதனைச் சுற்றியுள்ள ‘காலாங் பேசின்’ பகுதிகளிலும் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியைக் காண வரும் பொதுமக்கள், தீவிர பாதுகாப்புச் சோதனைகள் மற்றும் சாலை மூடல்களைக் கருத்தில் கொண்டு அரங்கிற்கு முன்கூட்டியே வந்துவிடுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தேசிய விளையாட்டரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் சிறப்பு நிகழ்வு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புச் சோதனைகளை விரைவுபடுத்த பொதுமக்கள் குறைந்த அளவிலான உடமைகளை மட்டும் எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணிந்திருப்பவர்கள் பாதுகாப்பு சோதனையின்போது அதைத் தற்காலிகமாக அகற்ற வேண்டும். பொதுவெளியில் அகற்ற விருப்பமில்லாதவர்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ள தனி அறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 100 மில்லிலீட்டருக்கும் அதிகமான கொள்ளளவு கொண்ட திரவப் பொருள்கள் கூடுதல் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். அதே வேளையில், தகரக் கொள்கலன்களில் அடைக்கப்பட்டுள்ள பானங்களுக்கு அனுமதி இல்லை.

துப்பாக்கிகள், பட்டாசுகள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருள்களை நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குள் கொண்டு செல்ல முயற்சி செய்வோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேசிய விளையாட்டரங்கத்துக்குள் செல்ல நுழைவுச்சீட்டு வைத்திருப்போருக்கு குடிநீர், சிற்றுண்டிகள் அடங்கிய தேசிய தினப் பொட்டலம் வழங்கப்படும்.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த ஸ்டேடியம் ரிவர்சைட் வாக், தஞ்சோங் ரூ உள்ளிட்ட பகுதிகளில் சீருடை அணிந்த பாதுகாப்புப் படையினர் பணியமர்த்தப்படுவர். பாதுகாப்பு எல்லையைத் தாண்டி கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் அப்பகுதிகள் பொதுமக்களின் பாதுகாப்புக்காகத் தற்காலிகமாக மூடப்படும்.

பொதுமக்கள் நேரலையில் கூட்ட நிலவரத்தை ‘Crowd@NationalStadium’ இணையப்பக்கம் வழியே மாலை 5 மணி முதல் இரவு 10.30 மணி வரை அறிந்துகொள்ளலாம். ஸ்டேடியம், தஞ்சோங் ரூ, நிக்கல் ஹைவே ஆகிய ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் காலாங் மற்றும் மவுண்ட்பேட்டன் போன்ற மாற்று ரயில் நிலையங்களைப் பயன்படுத்துமாறும் மெர்டேக்கா மற்றும் தஞ்சோங் ரூ பாலங்களில் நிற்பதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நிகழ்ச்சியை முன்னிட்டு ‘காலாங் பேசின்’ பகுதியில் இரு கட்டங்களாகச் சாலைகள் மூடப்படும். முதற்கட்டமாக காலை 7 மணியிலிருந்தும் இரண்டாம் கட்டமாக பிற்பகல் 3 மணியிலிருந்தும் குறிப்பிட்ட சாலைகள் மூடப்பட்டு இரவு 11 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.

வாணவேடிக்கையைக் காண்பதற்காகச் சாலைகளிலோ பாலங்களிலோ வாகனங்களை நிறுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் அகற்றப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. அணிவகுப்பு முடிந்த பிறகு, பொதுமக்கள் பொறுமையுடனும் அதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பின்பற்றியும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
தேசிய தின அணிவகுப்புபோக்குவரத்துபாதுகாப்பு