தேசிய சேவை 2027ஆம் ஆண்டில் அறுபதாண்டு நிறைவை எட்டுகிறது.
இந்த மைல்கல்லைப் பறைசாற்றும் வகையில், அடுத்த ஆண்டு தேசிய தின அணிவகுப்பு பாடாங் திடலுக்குத் திரும்பும் என்று தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.
எனவே, அடுத்த தேசிய தினக் கொண்டாட்டங்கள் அனைவர்க்கும் சிறப்பானதாக அமையும் என்று திரு சான் உறுதியளித்துள்ளார்.
“குறிப்பாக, கடந்த 60 ஆண்டுகளாக நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்க பணியாற்றிய அனைவரையும் அடுத்த ஆண்டின் கொண்டாட்டங்கள் அடையாளம் காணும்,” என்றார்.
தேசிய தின அணிவகுப்பு 2026 பாராட்டு நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரு சான், கொண்டாட்டங்களுக்குப் பின்னால் இருந்து தங்கள் அர்ப்பணிப்பையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தியவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
“2,000 தொண்டூழியர்கள், 4,000 பங்கேற்பாளர்கள், வாரக் கணக்கிலான தயாரிப்புகள், நீண்ட நேர உழைப்பு. சிங்கப்பூருக்காக தங்கள் வார இறுதி நாள்களைத் தயங்காமல் விட்டுக்கொடுத்தவர்கள் பலர்,” என்று அவர் பாராட்டினார்.
பத்தாண்டுகளுக்குப் பிறகு தேசிய தினக் கொண்டாட்டங்கள் தேசிய விளையாட்டரங்கத்தில் இடம்பெற்றன. அதற்கான ஏற்பாடுகள் எளிதல்ல என்று சுட்டிக்காட்டினார் திரு சான்.
“ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஓர் ஒருங்கிணைப்புத் திட்டத்தைப் பின்பற்றியிருந்தால் எளிதாக இருந்திருக்கும். ஆனால், புதிய யோசனைகளை ஆராய்ந்து பார்க்க ஏற்பாட்டுக் குழு தயாராக இருந்தது. இத்தகைய மனப்பான்மை விலைமதிப்பற்றது,” என்று அவர் சொன்னார்.
நிகழ்ச்சியில் மொத்தம் 27 தங்க விருதுகள், 109 முதன்மைப் பங்காளர் விருதுகள், 65 வெள்ளி விருதுகள், 75 முக்கியப் பங்காளர் விருதுகள் வழங்கப்பட்டன. அத்துடன், ஏறத்தாழ 256 பங்காளிகளும் சிறப்பிக்கப்பட்டனர்.
தேசிய தினக் கொண்டாட்டங்களின் வரலாற்றில் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றதையும் திரு சான் சுட்டினார்.
“தேசிய தின அணிவகுப்பு என்பது வெறும் நிகழ்ச்சி மட்டுமன்று. அது நம் நாட்டின் விழுமியங்களையும் கொள்கைகளையும் அங்கீகரிக்கும் ஒரு பெருங்கொண்டாட்டம்,” என்று அவர் சொன்னார்.


