தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை குறித்து சிமுக கருத்து

2 mins read
dae388aa-4404-4e45-9921-8ab1be49de30
‘சப்ஸ்டேக்’ (Substack) தளத்தில் இரு வாரங்களுக்கு ஒருமுறை வெளியாகும் புதிய இதழை வெளியிடவுள்ளதாக சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அறிவித்துள்ளது. - படம்: சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி / ஃபேஸ்புக்

பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தேசிய தினப் பேரணி உரை தொடர்பாகச் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி (சிமுக) தன் கருத்தைப் பதிவுசெய்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ), வேலைச் சந்தையையே ஒட்டுமொத்தமாக மாற்றிவரும் வேளையில் சிங்கப்பூரர்களுக்கு உதவ பிரதமர் வோங் சில திட்டங்களை அறிவித்துள்ளார்.

அவற்றில், தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஐடிஇ), பலதுறைத் தொழிற்கல்லூரி, பல்கலைக்கழகக் கல்வியை முடித்தவர்களுக்கு அரசாங்க நிதியாதரவிலான புதிய வேலைப்பயிற்சித் திட்டமும் அடங்கும்.

அதுகுறித்து, “ஏஐ தாக்கத்தினால் மாறியுள்ள பொருளியலில் தம் முதல் வேலையைப் பெறச் சிரமப்படும் புதிய பட்டதாரிகளுக்கான உடனடி ஆதரவை சிமுக வரவேற்கிறது. ஆனால், நாட்டின் கட்டமைப்பில் உள்ள ஆழமான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படவில்லை,” எனக் சிமுக தலைமைச் செயலாளர் லியோங் மன் வாய் தமது கட்சியின் ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“அரசாங்க நிதியாதரவுடன் கூடிய வேலைப்பயிற்சித் திட்டங்கள் ஒரு முக்கியக் கேள்வியை எழுப்புகின்றன. பட்டதாரிகள் முழுநேர வேலைகளுக்குப் பதிலாக வேலைப்பயிற்சிகளுடனேயே மனநிறைவடையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துவந்தால் உயர்கல்வி நம் இளையரை வேலையிடத்துக்குப் போதிய அளவில் தயார்படுத்துகின்றதா?” எனத் திரு லியோங் கேள்வி எழுப்பியுள்ளார்.

“மனிதர் செய்யமுடியாததைக்கூட ஏஐ செய்யமுடிகின்ற வேளையில், எவ்வாறு சிந்தனையாற்றல், சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல், உணர்ச்சிகள் தொடர்பான புரிதல், மாற்றங்களைக் கையாள்தல் என மனிதருக்கே உள்ள ஆற்றல்களை மேம்படுத்துவது?

“எப்படி நிறுவனங்கள் ‘ஏஐ’ மூலம் வேலைகளைக் குறைத்து லாபத்தை அதிகரிப்பதைத் தடுப்பது? ஏஐ பொருளியல் ஏற்றத்தாழ்வை மோசமடையச் செய்யாத வகையில் எப்படி நம் பொருளியல் கட்டமைப்பை மறுஆய்வு செய்வது?

“குறைந்த வருமானம் பெறும் வெளிநாட்டு ஊழியர்கள் செய்யும் வேலைகளை சிங்கப்பூரர்கள் செய்யத் தயாராக உள்ளனரா? (ஆய்வுகளின்படி, இவ்வேலைகளை ‘ஏஐ’ செய்யும் வாய்ப்புகள் ஆகக் குறைவு).

“இக்கேள்விகளுக்கு அரசாங்கத்தால் மட்டுமே பதிலளிக்கமுடியாது. சிங்கப்பூரர்களுடன் இணைந்து தீர்வுகளைக் கண்டறிய வேண்டும்,” என்று சிமுக நம்புவதாகத் திரு லியோங் கூறினார்.

தேசிய தினப் பேரணி உரை சில ஆலோசனைகளை வழங்கினாலும் வீட்டு விலை, விலைவாசி தொடர்பான முக்கியக் கேள்விகளுக்கு இன்னும் பதில்கள் கிடைக்கவில்லை என்றும் அவற்றில் அடிப்படையிலிருந்த மாற்றங்களுக்குச் சிமுக தொடர்ந்து குரல்கொடுக்கும் என்றும் திரு லியோங் கூறியுள்ளார்.

‘சப்ஸ்டேக்’ (Substack) தளத்தில் இரு வாரங்களுக்கு ஒருமுறை வெளியாகும் புதிய இதழையும் தமது கட்சி வெளியிடவுள்ளதாகத் திரு லியோங் அறிவித்தார். ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகும் அதன் முதல் பதிப்பு, தேசிய தினப் பேரணி உரை குறித்த அதன் முழு பதிலையும் தாங்கிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்