தேசிய தினப் பேரணி உரை: அங் மோ கியோவில் சில சாலைகள் மூடல்

தேசிய தினப் பேரணி உரை: அங் மோ கியோவில் சில சாலைகள் மூடல்

2 mins read
efd97f59-dcf0-4826-b085-ea2b19de7bac
சென்ற ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி, மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழக வளாகத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங் தேசிய தினப் பேரணி உரையை ஆற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பிரதமர் லாரன்ஸ் வோங் தேசிய தினப் பேரணி உரையை வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு ஆற்றவுள்ளார்.

அங் மோ கியோவில் உள்ள மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழக வளாகத்தில் அவரது உரை இடம்பெறுகிறது.

பேரணி உரையை முன்னிட்டு, மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழக வளாகத்தின் அருகில் உள்ள சில சாலைகளும் பாதைகளும் மூடப்படுகின்றன.

அன்றைய தினம் அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 11.59 மணி வரை குறிப்பிட்ட சில சாலைகள் மூடப்பட்டிருக்கும் என்று காவல் துறையினர் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தனர்.

அங் மோ கியோ டிரைவ், அங் மோ கியோ அவென்யூ 5லிருந்து அங் மோ கியோ டிரைவுக்குச் செல்லும் இணைப்புச் சாலை உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்கள் இதில் அடங்கும்.

இந்தக் காலகட்டத்தில், அவசரகால வாகனங்களுக்கும் அனுமதி பெற்ற வாகனங்களுக்கும் மட்டுமே அந்தச் சாலைகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.

சீரான போக்குவரத்தை உறுதிசெய்ய அங்குப் பாதுகாப்பு அதிகாரிகளும் காவல் துறையினரும் பணியமர்த்தப்படுவார்கள்.

சாலை மூடல் தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால், 1800-218-0000 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

பிரதமர் லாரன்ஸ் வோங் தமது தேசிய தினப் பேரணி உரையை மாலை 6.45 மணிக்குத் தொடங்குவார். அவர் முதலில் மலாய் மொழியிலும், பிறகு மாண்டரின் மொழியிலும் உரையாற்றுவார்.

அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு அவருடைய ஆங்கில உரை இடம்பெறும்.

உள்ளூர் தொலைக்காட்சி ஒளிவழிகளிலும் வானொலி நிலையங்களிலும் அது ஒளி/ஒலிபரப்பப்படும். அத்துடன், பிரதமர் வோங் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் யூடியூப் ஒளிவழிகளிலும் அது நேரலையாகக் காண்பிக்கப்படும்.

நேரடி ஒளிபரப்பைக் காணத் தவறியோர், ஆகஸ்ட் 24ஆம் தேதிமுதல் www.youtube.com/pmosingapore அல்லது www.pmo.gov.sg ஆகிய இணையத்தளங்களில் தேசிய தினப் பேரணி உரையைக் காணலாம்.

தேசிய தினப் பேரணி, பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்றுவதற்கும் நாட்டின் முன்னேற்றம் குறித்து தெரியப்படுத்துவதற்கும் முக்கியக் கொள்கை விவகாரங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் சிங்கப்பூரின் எதிர்காலச் சவால்களைக் கோடிக்காட்டுவதற்குமான ஒரு தளமாகும்.

ஆகஸ்ட் 23ஆம் தேதி நிகழ்வு, பிரதமர் வோங்கின் மூன்றாவது தேசிய தினப் பேரணி உரையாக இருக்கும்.

குறிப்புச் சொற்கள்