சிங்கப்பூரின் 60வது தேசிய தினத்தை முன்னிட்டு, அதிபர் மாளிகையில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) தேசிய தின ஒன்றுகூடல் விருந்து நடைபெற்றது.
பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் லீ சியன் லூங், ஓய்வுபெற்ற கெளரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் ஆகியோர் அவர்களது துணைவியாருடன் கிட்டத்தட்ட 1,000 பேர் பங்கேற்ற அந்த விருந்தில் கலந்துகொண்டனர்.
பல்லின இரவு உணவு, நேரடி இசைச் சூழலில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள், தொண்டூழியர்கள், சுகாதாரப் பங்காளிகள், தேசிய விளையாட்டாளர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் ஒன்றுகூடிக் கலந்துறவாடி மகிழ்ந்தனர்.
இரவு 8 மணி அளவில் நிகழ்ச்சிக் கூடாரத்திற்குத் தம் துணைவியார் திருவாட்டி ஜேன் இத்தோகியுடன் வருகையளித்தார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்.
நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, உள்ளூர்க் கலைஞர் சார்லி லிம் ‘ஹியர் வி ஆர்’ (Here We Are) என்ற இவ்வாண்டின் தேசிய தினப் பாடலைப் பாடினார்.
அதிபர், பிரதமர், மூத்த அமைச்சர், ஓய்வுபெற்ற கெளரவ மூத்த அமைச்சர் என நால்வரும் தேசிய தின கேக்கை வெட்டி சிங்கப்பூருக்கான பிறந்தநாள் பாடலை விருந்தினர்களுடன் சேர்ந்து பாடினர். அதற்குப் பிறகு, நால்வரும் விருந்தினர்களுடன் உரையாடி, புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். அனைவரும் ஒன்றிணைந்து தேசிய கீதத்தைப் பாடியதைத் தொடர்ந்து நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.