சிங்கப்பூரின் மத்தியப் பகுதியில் 24 மணி நேரத்துக்கான காற்றுத்தரக் குறியீடு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) பிற்பகல் 2 மணி நிலவரப்படி, 91ஐ எட்டியதால், தேசிய சுற்றுப்புற வாரியம் சிங்கப்பூரில் உள்ள காற்றின் தரத்தைக் கண்காணித்து வருகிறது.
வார இறுதியில் காட்டுத்தீச் சம்பவங்களும் அடர்ந்த புகைமூட்டமும் அதிகரித்திருப்பதைக் கவனித்ததாக ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் வாரியம் தெரிவித்தது. அடர்ந்த புகைமூட்டங்கள் முக்கியமாகக் கலிமந்தானிலும் தென் சுமத்ராவிலும் கண்டறியப்பட்டுள்ளன.
ரியாவ் பகுதியிலும் புகைமூட்டங்கள் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட வாரியம், இந்த வாரம் வறண்ட வானிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியது.
“தெற்கு அல்லது தென்கிழக்குத் திசையிலிருந்து காற்று வீசுவதால், சிங்கப்பூரை அவ்வப்போது புகைமூட்டம் பாதிக்க வாய்ப்புள்ளது,” என்றும் வாரியம் தெரிவித்தது.
ஒட்டுமொத்தக் காற்றின் தரத்தை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் காற்றின் தரம் மோசமடைந்தால் தேவையான ஆலோசனைகளை வழங்கவுள்ளதாகவும் அது கூறியது.
காற்றின் தரத்தைப் பற்றிய நேரடித் தகவல்களுக்குத் தனது இணையத்தளங்களையும் ‘மைஇஎன்வி’ செயலியையும் நாடுமாறு வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


