தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடும்பக் கட்டமைப்புகளைக் கொண்டாடிய விழா

3 mins read
5f3b127d-d193-488b-b595-1362bbc3f5cd
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சிற்கும் ‘கேப்பிட்டாலேண்ட்’ நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்தானது. - படம்: லாவண்யா வீரராகவன்

வலுவான, மீள்திறன் கொண்ட குடும்பக் கட்டமைப்புகளைக் கொண்டாடவும் மேம்படுத்தவும் ஆதரவளிக்கும் ‘தேசியக் குடும்ப விழா’ சனிக்கிழமை (மே 31) நடைபெற்றது.

‘வாழ்க்கைக்கான குடும்பங்கள் மன்றம்’ (Families for Life) ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவினைச் சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தொடங்கி வைத்தார். சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடந்த இவ்விழா, குடும்பங்கள், சமூக அமைப்புகள், நிறுவனப் பங்காளிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் நடைபெற்றது.

மன்றத்தின் முதன்மைத் திட்டமான இக்குடும்ப விழா, சிங்கப்பூரின் அறுபதாவது ஆண்டுடன் வலுவான, வெற்றிகரமான குடும்பக் கட்டமைப்புகள் சிங்கப்பூர் சமூகத்தின் மேம்பாட்டில் இன்றியமையாப் பங்கு வகிப்பதையும் கொண்டாடுகிறது.

விழாவில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு குழு விளையாட்டுகளில் குடும்பத்தினர் பங்கேற்று மகிழ்ந்தனர்.
விழாவில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு குழு விளையாட்டுகளில் குடும்பத்தினர் பங்கேற்று மகிழ்ந்தனர். - படம்: லாவண்யா வீரராகவன்

முன்னோடித் திட்டமாக நீ சூன், சுவா சூ காங் பகுதிகளில் தொடங்கிய இத்திட்டம், இவ்வாண்டு தீவெங்கிலும் 24 வட்டாரங்களுக்கு விரிவடைகிறது.

ஏறத்தாழ 250 சமூகப் பங்காளிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளதாக மன்றம் கூறியது. இத்திட்டத்தின்கீழ் ஜூன் மாத இறுதி வரை தீவெங்கிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஒன்றிணைவு நிகழ்ச்சிகளும் பயிலரங்குகளும் நடைபெறவுள்ளன.

அந்நிகழ்ச்சிகள் மூலம் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதுடன், மக்கள் சந்திப்புகள் மூலம் ஆதரவு, ஆலோசனைகளையும் பெறமுடியும்.

தேசியக் குடும்ப விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி.
தேசியக் குடும்ப விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி. - படம்: லாவண்யா வீரராகவன்

இந்நிகழ்ச்சியில், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கும் ‘கேப்பிட்டாலேண்ட்’ நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்தானது.

இக்குறிப்பு, ஊழியர்களுக்கு அவர்களது குடும்பங்களை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது, வணிக நிர்வாகக் கட்டமைப்பில் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் விதமான அணுகுமுறைகளில் முதலீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது.

“நம் நாட்டின் பயணத்தில் குடும்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன,” என்று கூறிய அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, “குடும்பங்களின் மேம்பாட்டுக்கு எவ்வாறு ஆதரவளிப்பது எனும் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுத்த ஏதுவாக ‘குடும்பங்களுக்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பூர் 2025’ எனும் திட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அத்திட்டம் இதுவரை வாழ்வின் பல்வேறு கட்டங்களில் குடும்பங்களுக்கு விரிவான ஆதரவுக் கட்டமைப்பை வழங்கி வருகிறது,” என்றார்.

“குடும்பங்களுக்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பூர் எனும் இலக்கை அடைய அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் மட்டும் போதாதது,” என்று குறிப்பிட்ட அவர், அதற்கு ஆதரவளித்துவரும் பங்காளிகளையும் பாராட்டினார்.

“பணியிடங்களில் குடும்ப அமைப்புக்கேற்ற அணுகுமுறைகள் விதிவிலக்காக இல்லாமல் விதிமுறைகளாக இருக்க வேண்டும்,” என்று வலியுறுத்திய அமைச்சர், அது ஊழியர்களின் மனநிறைவைக் கூட்டி, உற்பத்தித்திறனையும் அதிகரிக்கும் என்றார்.

மேலும் இந்தத் தொடக்க விழாவில், ‘உண்மைக் குடும்பங்கள், உண்மைக் கதைகள்’ எனும் கருப்பொருளில் சிங்கப்பூர்க் குடும்பங்களின் ஏற்றத்தாழ்வுகள், குழந்தைப்பருவக் குதூகலங்கள், காதல் வாழ்க்கை, ஒன்றிணைந்த நீண்ட வாழ்வு ஆகிய உண்மைக் கதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

பணியிடங்களில் குடும்ப அமைப்புக்கேற்ற அணுகுமுறைகள் விதிவிலக்காக இல்லாமல் விதிமுறைகளாக இருக்க வேண்டும்.
அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி

வாழ்க்கைக்கான குடும்பங்கள் மன்றத்தில் ஈராண்டுகளாகத் தொண்டூழியம் செய்துவரும் நவீன் பிரகா‌ஷ் (35) - கேத்தரின் சில்வியா பானு (34) இணையர், “குடும்பம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து உதவுகிறோம். எந்தவித எதிர்பார்ப்புமின்றிப் பலருடன் பழக வாய்ப்பு கிட்டுகிறது. அது தரும் மகிழ்ச்சிக்கும் மனநிறைவிற்கும் எல்லையில்லை,” என்றனர்.

தங்கள் ஐந்து வயது மகள் ரேச்சலுடன் அங் மோ கியோ வட்டாரக் குடியிருப்பாளர்களான தொண்டூழியர்கள் பிரகா‌ஷ்-கேத்தரின் இணையர்.
தங்கள் ஐந்து வயது மகள் ரேச்சலுடன் அங் மோ கியோ வட்டாரக் குடியிருப்பாளர்களான தொண்டூழியர்கள் பிரகா‌ஷ்-கேத்தரின் இணையர். - படம்: லாவண்யா வீரராகவன்

பலரைப் பார்ப்பதன் மூலம் தங்கள் ஐந்து வயது மகள் ரேச்சல் எவலின் ஏக்னஸ் குடும்பக் கட்டமைப்பின் முக்கியத்துவம் குறித்துக் கற்றுக்கொள்வதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.

விளையாட்டின்வழி குடும்ப உறவுகளை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றி வரும் ‘ஸ்போர்ட்எஸ்ஜி’ அமைப்பில் ஈடுபடும் சிட்னி குமார், 39, இத்தொடக்க விழாவில் தமது நான்கு வயது மகன் இலி குமார் டானுடன் ‘அடாப்டிவ் ஸ்போர்ட்ஸ்’ எனும் அனைவருக்கும் ஏதுவாக அமைந்த விளையாட்டுகளில் பங்கேற்றார்.

குழந்தைகளுடன் இணைந்து விளையாடுவது அன்பைப் பரிமாறிக்கொள்ளவும் வெளிக்காட்டவும் சிறந்த வாய்ப்பாக அமைகிறது என்றும் அனைவரும் அதில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகுடும்பம்கொண்டாட்டம்எக்ஸ்போதிருவிழா