வேகமாக நோய் கண்டறியும் முறையை தேசிய இதய நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் துடிப்புமிக்க தனிநபர்களுக்கு உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய அல்லது கடுமையான இதய நோய் இருந்தால் அது அவர்களுக்கு விரைவில் தெரிந்துவிடும்.
இத்தகைய நோய் கண்டறியும் முறை ஆசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
புதிய இதய காந்த அதிர்வு உடற்பயிற்சி எனும் நோய் கண்டறியும் முறையை எம்ஆர்ஐ சிகிச்சையுடன் சேர்த்து பரிசோதனை நடத்தப்படும். ஒருமுறை நடத்தப்படும் பரிசோதனையிலேயே ஒருவருக்கு இதய நோய் உள்ளதா என்பது தெரிந்துவிடும்.
மிதிகட்டைகளைக் கொண்டிருக்கும் பரிசோதனை இயந்திரத்துடன் எம்ஆர்ஐ ஸ்கேனர் சாதனம் இணைக்கப்பட்டிருக்கும்.
பரிசோதனை செய்யப்படும் நோயாளி மிதிகட்டைகளைத் தொடர்ச்சியாக மிதிக்கும்போது அவரது இதயச் செயல்பாட்டையும் ரத்த ஓட்டத்தையும் மருத்துவர்கள் கண்காணிப்பர்.
மானியம் வழங்கப்பட்ட நோயாளிகளுக்கு வழக்கமான எம்ஆர்ஐ பரிசோதனையைவிட இந்தப் புதிய நோய் கண்டறியும் முறையின் கட்டணம் $200 அதிகம். தனியார் நோயாளிகளுக்கு ஏறத்தாழ $500 அதிகம்.
எம்ஆர்ஐ பரிசோதனை முறையைவிட புதிய நோய் கண்டறியும் முறை கூடுதலாக 15லிருந்து 20 நிமிடங்கள் எடுக்கும்.
எம்ஆர்ஐ பரிசோதனை முறை செய்துகொள்ள ஏறத்தாழ ஒரு மணி நேரம் எடுக்கும்.