ரங்கோலிக் கலைஞர் விஜயலட்சுமி உள்ளிட்ட ஐவருக்குத் தேசிய மரபுடைமைக் கழகத்தின் விருதுகள் வழங்கப்பட்டன.
திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட 66 வயது விஜயலட்சுமி 1992ஆம் ஆண்டு சிங்கப்பூர் வந்தார்; 2005ஆம் ஆண்டு சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றார்.
தொட்டுணர முடியாத கலைகளைச் சமூகத்திற்கும் அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டுசெல்வோரையும் வர்த்தக அமைப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாகத் தேசிய மரபுடைமைக் கழகம் விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது.
சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 2) நடந்த நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர் அமைச்சர் எட்வின் டோங் விருதுகளை வழங்கினார்.
மலாய் மேளத்தை உருவாக்கும் முகம்மது யாசிஸ், பெரனாக்கன் முறையில் நகைகளைச் செய்யும் தாமிஸ் குவான், சீனத் தேநீர்க் கடை பெக் சின் சூன், தியோச்சூ பலகாரக் கடை தை மோ சான் ஆகியோர் மற்ற வெற்றியாளர்கள்.
வெற்றியாளர்களுக்கு 5,000 வெள்ளி ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. மேலும் 20,000 வெள்ளி வரையிலான மானியத்திற்கும் அவர்கள் தகுதிபெற்றுள்ளனர்.