தேசிய சிறுநீரக அறநிறுவனத்துக்கு புதியவர் ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்பணியில் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய ஆர்தர் லாங்கிடமிருந்து ஆங் ஹாவ் யாவ் ஏப்ரல் 15ஆம் தேதி தலைவர் பொறுப்பை ஏற்கிறார்.
கடந்த 2021ஆம் ஆண்டில் தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் இயக்குநர் சபையில் இணைந்த 52 வயது திரு ஆங், அதன் உதவித் தலைவராக பணியாற்றி வந்தார்.
திரு ஆங்கின் நியமனம் பற்றி குறிப்பிட்ட தேசிய சிறுநீரக அறநிறுவனம், அவர் பல முன்னணி அறப்பணி அமைப்புகளில் பணியாற்றி, பரந்த பழுத்த அனுபவம் பெற்றவர் என்று குறிப்பிட்டது.
தற்போது சிங்கப்பூர்க் கடன்பற்று ஆலோசனைச் சங்கத்தின் தலைவராகவும் அவர் உள்ளார்.
அவர், சாட்டா காம்ஹெல்த்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.
“முன்பே தலையிட்டு தடுப்பு முயற்சிகளை விரிவுபடுத்தி, புத்தாக்க சிகிச்சைகளை ஊக்குவிப்பதே எங்களுடைய முக்கிய நோக்கம். அப்படிச் செய்வதால் சிங்கப்பூரில் தாக்குப்பிடிக்கக்கூடிய அதிக சுகாதாரப் பராமரிப்புகளை செயல்படுத்த முடியும்” என்று திரு ஆங் குறிப்பிட்டார்.
திரு லாங், 53, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் சபையிலிருந்து விலகுகிறார். 2015ஆம் ஆண்டில் இயக்குநராக தேசிய சிறுநீரக அறநிறுவனத்தில் அவர் சேர்ந்தார். 2020ல் அவர் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

