தேசிய மனநலக் கழகம், சிங்கப்பூரில், மனநல நிலைமையைப் பதிவுசெய்ய மூன்றாவது முறையாக தேசிய அளவிலான கருத்தாய்வைத் தொடங்கியுள்ளது.
கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்னதாக வெளிவந்த முந்திய கருத்தாய்வில், மனநலப் பாதிப்புகள் அதிகரித்துவருவதாகக் குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் புதிய ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகள் நீடிக்கக்கூடிய சிங்கப்பூர் மனநலச் சுகாதார ஆய்வு, கொவிட்-19 நோய்ப்பரவலுக்குப் பிறகு முதன்முறையாக மேற்கொள்ளப்படும் முழுமையான ஆய்வாக அமையவுள்ளது.
நல்ல மனநலத்தைக் காக்கும் காரணங்களை உள்ளடக்கும் வகையில் ஆய்வு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மனநலப் பாதிப்புகள் எந்த அளவுக்குப் பரவலாக உள்ளன என்பதை ஆராய்வதற்கு அனைத்துலகத் தரநிலை அளவீடுகளைப் பயன்படுத்தும் ஒரே தேசிய அளவிலான ஆய்வாக இது உள்ளது.
மனநலக் கொள்கை குறித்த வழிகாட்டுதலுக்குத் தேவையான விரிவான, மக்கள்தொகை சார்ந்த தகவல்களை இந்த ஆய்வு வழங்கும் என்று அதன் தலைமை ஆய்வாளராக உள்ள இணைப் பேராசிரியர் மைதிலி சுப்பிரமணியம் தெரிவித்தார்.
2010ஆம் ஆண்டிற்குப் பிறகு, நிலவரம் எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை மனநலக் கழகத்தின் 2016ஆம் ஆண்டு ஆய்வு காண்பித்தது.
18 வயதுக்கும் மேற்பட்டோரில் எழுவரில் ஒருவர், தங்கள் வாழ்நாளில் மனநலப் பாதிப்பை உணர்ந்திருப்பதாக 2016 ஆய்வு குறிப்பிட்டது. இது, 2010 ஆய்வில் குறிப்பிடப்பட்ட ‘எண்மரில் ஒருவர்’ என்ற விகிதத்தைக் காட்டிலும் அதிகமாகும்.
தொடர்புடைய செய்திகள்
கிருமித்தொற்று மனநலன் மீது ஏற்படுத்தியுள்ள நீண்டகாலப் பாதிப்பு குறித்த தகவல்களையும் கண்ணோட்டங்களையும் இந்த ஆய்வு வழங்கும் என்று பேராசிரியர் மைதிலி கூறினார்.
முக்கியமாக, இந்த ஆய்வு 15 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்களையும் மதிப்பிடும்.
“இளமைக் காலத்தில்தான் பல்வேறு மனநலப் பாதிப்புகள் தலைதூக்கத் தொடங்குகின்றன. இந்த வயதுப் பிரிவினரிடமிருந்து தரவுகளைப் பதிவுசெய்வதன் மூலம், கண்டுபிடிப்புகளுக்கும் தலையீடுகளுக்கும் தேவையான முக்கியக் காலத்தை முன்கூட்டியே கண்டறியலாம்,” என்றார் அவர்.
தீவிர மனச்சோர்வுக் குறைபாடு, மனக்கவலைக் குறைபாடு, கட்டாயச் செயல் குறைபாடு, மிகையான உணவு உண்ணும் குறைபாடு போன்ற உணவு சார்ந்த கோளாறுகள் உட்பட குறிப்பிட்ட சில மனநலக் குறைபாடுகளுக்கான அறிகுறிகள் எத்தனை பேரிடம் தென்படுகின்றன என்பதை இந்த ஆய்வு அளவிடும்.
“நோயின்மீது மட்டுமே கவனம் செலுத்துவது, தாமதமான செயல்பாடாகும். நேர்மறையான மனநலம், பாதுகாப்புக் காரணங்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொள்வதன் மூலம், நாம் பிரச்சினையின் தொடக்கத்திற்குச் சென்று, மக்களை நலமாக வைத்திருக்கும் அம்சங்களை வலுப்படுத்த முடியும். மேலும், பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்ப்பதற்கான திட்டங்களையும் செயல்படுத்தலாம்,” என்றார் பேராசிரியர் மைதிலி.

