சம்பள வழிகாட்டிகளை உருவாக்க பொதுமக்களின் கருத்துகளை நாடும் தேசிய சம்பள மன்றம்

சம்பள வழிகாட்டிகளை உருவாக்க பொதுமக்களின் கருத்துகளை நாடும் தேசிய சம்பள மன்றம்

2 mins read
53210ae9-7834-4e7f-bcef-d1cee73926cc
சம்பளம் தொடர்பான கருத்துகளையும் யோசனைகளையும் இம்மாதம் 19ஆம் தேதிக்குள் மக்கள் தேசிய சம்பள மன்றத்திடம் முன்வைக்கலாம். - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் வழங்கப்படும் ஊதியம் குறித்தும் வேலை வாய்ப்புப் பிரச்சினைகள் பற்றியும் வருடாந்தர வழிகாட்டிகளை உருவாக்க, தேசிய சம்பள மன்றம் பொதுமக்களின் கருத்துகளை நாடுகிறது. அக்டோபர் இறுதிக்குள் அந்த வழிகாட்டிகளை வெளியிட மன்றம் திட்டமிட்டுள்ளது.

இவ்வாண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதிவரைக்குமான வழிகாட்டிகளை உருவாக்க இம்மாதம் 19ஆம் தேதி மன்றம் ஒன்றுகூடும் என்று மனிதவள அமைச்சு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) அறிக்கை வெளியிட்டது.

எதிர்வரும் வழிகாட்டிகள் தொடர்பில் go.gov.sg/nwc2627publicfeedback என்ற இணையத்தளத்தில் இம்மாதம் 19ஆம் தேதிக்குள் மக்கள் தங்கள் கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைக்கலாம்.

சிங்கப்பூரின் பொருளியல் போட்டித்தன்மை, வேலைச் சந்தை நிலவரம், பணவீக்கம், உற்பத்தியின் வளர்ச்சி, அனைத்துலகப் பொருளியல் முன்னுரைப்பு ஆகியவற்றைத் தேசிய சம்பள மன்றம் கருத்தில்கொள்ளும் என்று அமைச்சு சுட்டியது.

குறைந்த வருமான ஊழியர்களுக்கான படிப்படியாக உயரும் சம்பள முறை தொடர்பிலான வழிகாட்டிகளையும் மன்றம் தொடர்ந்து வெளியிடும்.

துப்புரவு, பாதுகாப்பு உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறைகளில் குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களின் திறன்களுக்கும் செயல்பாட்டுக்கும் ஏற்ற சம்பள உயர்வை வழங்க வகைசெய்கிறது படிப்படியாக உயரும் சம்பள முறை.

அரசாங்கப் பிரதிநிதிகள், முதலாளிகள், ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மன்றத்திற்கு டிபிஎஸ் வங்கியின் தலைவரான பீட்டர் சியா தலைமை தாங்குவார்.

கடந்த ஆண்டின் ஊதியம், பணவீக்கத்தைக் கருத்தில்கொண்டபின், 4 விழுக்காடு ஊதிய வளர்ச்சி அடைந்தது. அது, 2024ஆம் ஆண்டில் பதிவான 3.2 விழுக்காட்டு வளர்ச்சியைவிட அதிகம் என்று மனிதவள அமைச்சின் ஊதிய நடைமுறைகள் அறிக்கை சுட்டியது.

ஊதிய வளர்ச்சி தொடர்ந்து சாதகமாக இருக்கும் என்று அமைச்சு எதிர்பார்க்கிறது.

குறிப்புச் சொற்கள்
ஊதியம்பொதுமக்கள்கருத்து