சிங்கப்பூரில் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட தேசிய விண்வெளி ஆய்வு அமைப்பு (என்எஸ்ஏஎஸ்) தன் எதிர்காலத் திட்டங்களை வெள்ளிக்கிழமை (ஜூலை 31) முன்வைத்தது.
நகரின் மையத்தில் உள்ள ‘கிரேன்ட் பார்க் சிட்டி ஹால்’ வளாகத்தில் அது செய்தியாளர்களை முதன்முறையாகச் சந்தித்தது.
அச் சந்திப்பில் தற்போதைய 30 ஊழியர்கள் நிறைந்த துறையை மும்மடங்காக்கும் திட்டத்தை என்எஸ்ஏஎஸ் விளக்கியது. பலதுறைகளுக்கான ஒருங்கிணைந்த புதிய துணைச்செயல்பாட்டு நிலையம் ஒன்றை நிறுவுவதோடு விண்வெளியை நீடித்தநிலைத்தன்மையுடன் பாதுகாப்பாகப் பயன்படுத்த அந்த புதிய ஊழியர்கள் உதவுவார்கள் என்று அமைப்பு தெரிவித்தது.
அனைத்துத் துறைகளில் இருந்தும் அமைப்பு பலதரப்பட்ட ஊழியர்களை பணியமர்த்தவுள்ளது. சட்டம், பொறியியல், தொழில்துறை மேம்பாடு, அனைத்துலக உறவு நிர்வாகம் போன்றவை அவற்றுள் அடங்கும்.
“இன்று என்எஸ்ஏஎஸ் 30 ஊழியர்களுடன் இயங்குகிறது. வரும் ஒருசில ஆண்டுகளில் அதனை இரண்டு பிறகு மும்மடங்காக்க நாம் செயலாற்றுவோம்,” என்று அமைப்பின் தலைமை நிர்வாகி ஙியாம் லெ நா செய்தியாளர்களிடம் நம்பிக்கையுடன் கூறினார்.
கூடுதல் ஊழியர்கள், புதிதாகக் கட்டப்படும் பல அரசாங்கத் துறைகளுக்கான ஒருங்கிணைந்த செயல்பாட்டு நிலையத்தில் பணியாற்றுவர். அந்த நிலையம், அரசாங்க அமைப்புகளை ஒன்றுசேர்த்து அவற்றுக்குத் தேவையான உதவிகளை வழங்கும்.
எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட இடங்களையும் சுற்றுச்சூழல்களையும் கண்காணித்து நகர வடிவமைப்புக்கும் துறைமுக செயல்பாட்டுக்கும் உணவு பாதுகாப்புக்கும் உறுதுணையாக செயற்கைக்கோள்களால் விண்வெளியில் இருந்து புகைப்படங்கள் எடுப்பது போன்ற செயல்பாடுகள் உள்ளடங்கும்.
தற்போதைய நிலவரப்படி, விண்வெளியில் இடம்பெறக்கூடிய நடவடிக்கைகள் குறித்து செயற்கைக்கோள்களை நிறுவும் மூன்றாம் தரப்பினரிடம் இருந்து என்எஸ்ஏஎஸ் அத்தகைய தகவல்களைப் பெறுகிறது.
புதிய நிலையம் செயற்கைக்கோள்களையும் இயக்கும்
சில நேரங்களில் அரசாங்க அமைப்புகளுக்கிடையே ஒரே பணியை இருமுறை செய்வதைத் தவிர்க்கும்படியான ஒருங்கிணைந்த செயல்பாடுகள் உறுதி செய்யப்படுவதில்லை. அதுபோன்றவற்றை புதிய நிலையம் கையாளும்.
புதிய நிலையம் விண்வெளியில் செயற்கைக்கோள்களையும் தன்னிச்சையாகச் செயல்படுத்தும். அவை மற்றவற்றுடன் மோதிக்கொள்வதைத் தவிர்க்கக் கண்காணிப்புப் பணிகளையும் மேற்கொள்ளும்.

