தேசியப் பல்கலைக் கழக மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் அனைத்தும் 2038ஆம் ஆண்டுக்குள் புதிய படுக்கைகளாக மாற்றப்படும்.
மருத்துவமனையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சிகளின் முதற்கட்டமாக 2033ஆம் ஆண்டுக்குள் 600 படுக்கைகள் புதியதாக மாற்றப்படுவதோடு கூடுதலாக 100 புதிய படுக்கைகள் சேர்க்கப்படும் எனச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
தேசியப் பல்கலைக் கழக மருத்துவமனையின் 40ஆம் ஆண்டு நிறைவையொட்டி மரினா பே சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு நிலையத்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 22) நடந்த இரவு விருந்தில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.
அடுத்த கட்டமாக 2038ஆம் ஆண்டுக்குள் மருத்துவமனையில் இருக்கும் மற்ற படுக்கைகள் புதியதாக மாற்றப்படும் என்றும் கூடுதலாக 200 படுக்கைகள் சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் சொன்னார்.
“மாற்றங்களுக்குப் பிறகு மருத்துவமனையின் மொத்த படுக்கை வசதி 1500 ஆக உயரும். இதன்மூலம் கூடுதல் நோயாளிகளைப் பராமரிக்க முடியும். மேலும், அவசரச் சிகிச்சைப் பிரிவுகள், அறுவைச் சிகிச்சை அறைகள், வெளிநோயாளிகளுக்கான மருத்துவச் சேவை ஆகியவை மேம்படுத்தப்படும்,” என்றார் அமைச்சர் ஓங்.
புத்துயிரூட்டப்படும் மருத்துவமனை வளாகம் நோயாளிகள் சுலபமாக அணுகக்கூடிய வகையிலும் மருத்துவச் சேவைகளை எளிதாகக் கண்டறியக் கூடிய விதத்திலும் மருத்துவ வசதிகளுக்கு இடையேயான தூரம் குறைவாகவும் இருக்கும் என அவர் மருத்துவமனையில் மேம்படுத்தப்படும் வசதிகள் குறித்து விவரித்தார்.
நிறைய செடி, மரங்கள் ஆகியவற்றோடு கரிமத்தைக் குறைவாக வெளியேற்றும் வகையில் பசுமை வளாகமாக மருத்துவமனை மேம்படுத்தப்படும் என அவர் 4,000 விருந்தினர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசியபோது கூறினார்.
“சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் இருக்கும் சுகாதார உள்கட்டமைப்பில் இது ஒரு பெரிய மேம்பாடாக இருக்கும்,” என அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
மேற்கு வட்டாரத்தில் வளர்ந்து வரும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு தேசியப் பலகலைக்கழக மருத்துவமனை வளாகத்திற்குப் புத்துயிரூட்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இப்பணிகள் அனைத்தும் நிறைவடைய கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாகும் என முன்னுரைக்கப்படுகிறது.
மருத்துவமனை அதன் நெறிகளையும் சிறப்பையும் தொடர்ந்து நிலைநிறுத்திவரும் அதே வேளையில், அடுத்த பத்து ஆண்டுகளில் அதன் செயல்பாட்டில் நிறைய மாற்றங்கள் காணும் என்றார் அவர்.
“மூப்படைந்துவரும் மக்கள் தொகை, முன்னேறிவரும் மருத்துவத் தொழில்நுட்பம், அதிகரித்துவரும் தேசிய சுகாதார செலவினங்கள் ஆகியவை வளங்களை இறுக்கமடைய செய்யும். இவற்றை சமாளிக்க மருத்துவமனை மூன்று மிகப் பெரிய மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டும்,” என அமைச்சர் ஓங் கூறினார்.
“அவற்றில் முதன்மையானது மருத்துவமனைக் கட்டமைப்பு மாற்றம். 40 முதல் 50 ஆண்டுகள் பழமையான மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் வசதிகள் அனைத்தும் மேம்படுத்தப்பட வேண்டும்.
“இரண்டாவது, மருத்துவத் தொழில்நுட்பத்தில் மாற்றம். மருத்துவமனையின் பெரும்பாலான செயல்பாட்டில் இது ஊடுருவி உள்ளது. அடுத்தது, மருத்துவச் சேவை வழங்கும் இடங்களில் மாற்றம். மக்களுக்கேற்ற இடங்களில் அவர்களுக்கேற்ற வகையில் தடையின்றி சுகாதாரச் சேவை வழங்குவது குறிப்பாக, துடிப்பாக மூப்படையும் நிலையங்களை அணுகி அவற்றின் உதவியுடன் சமூகத்திற்கு மருத்துவ உதவி வழங்க மருத்துவமனை திட்டமிட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் ஓங் தெரிவித்தார்.