தேசிய சம்பள மன்றம் ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று கூடுகிறது.
சம்பளம், வேலை வாய்ப்பு விவகாரங்கள் தொடர்பான வருடாந்திர வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த கலந்துரையாடலை அது தொடங்க இருக்கிறது.
இதுதொடர்பாக பொதுமக்களின் கருத்தை அது நாடுகிறது.
வழிகாட்டி நெறிமுறைகள் நவம்பர் மாதம் வெளியிடப்படும்.
அதில் இடம்பெறுபவை 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும்.
சம்பளம் தொடர்பாகப் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகள், சம்பள உயர்வுக்கான வரம்பு (குறிப்பாக குறைந்த வருமான ஊழியர்களுக்கு) ஆகியவை வழிகாட்டி நெறிமுறைகளில் இடம்பெறும்.
சம்பளம் தொடர்பான விவகாரங்கள் பற்றி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் எதிர்வரும் வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைக்க விரும்புவோரும் செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் தேசிய சம்பள மன்றச் செயலகத்திடம் தங்கள் கருத்துகளைச் சமர்ப்பித்துவிட வேண்டும்.
சிங்கப்பூரின் பொருளியல் போட்டித்தன்மை, தொழிலாளர் சந்தை நிலவரம், பணவீக்கம், உற்பத்தித்திறன் வளர்ச்சி, உலகளாவிய பொருளியல் நிலை ஆகியவற்றை தேசிய சம்பள மன்றம் அதன் கலந்துரையாடலின்போது கருத்தில் கொள்ளும் என்று மனிதவள அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
குறைந்த வருமான ஊழியர்களுக்குப் படிப்படியாக உயரும் சம்பளத்தின் அடிப்படையில் வருடாந்திர வழிகாட்டி நெறிமுறையை தேசிய சம்பள மன்றம் தொடர்ந்து அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
சம்பள உயர்வும் பணவீக்கமும் மெதுவடைந்துள்ளன. பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு வழங்கப்படும் சம்பளம் 2023ஆம் ஆண்டில் 0.4 விழுக்காடு அதிகரித்தது.
2022ஆம் ஆண்டிலும் அது 0.4 விழுக்காடு ஏற்றம் கண்டது.
தேசிய சம்பள மன்றத்தில் முதலாளிகள், ஊழியர்கள், அரசாங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர்.
தேசிய சம்பள மன்றத்தில் 38 உறுப்பினர்கள் உள்ளனர்.
அவர்களில் பத்து பேர் புதிய உறப்பினர்கள்.
சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் புதிய தலைவர் திரு டான் ஹீ டெக், தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) உதவி தலைமைச் செயலாளர் பேட்ரிக் டே, உணவு, பானம் தொடர்பான ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் திருவாட்டி ஜூலி சியோங் ஆகியோர் மன்றத்தில் இடம்பெறுகின்றனர்.