கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆக அதிகமான பங்கேற்புடன் சிங்கப்பூர்ச் சிறைத்துறையின் தேசிய இளையர் சாதனை விருதளிப்பு நிகழ்ச்சியில் இவ்வாண்டு மொத்தம் 96 கைதிகள் விருதுகள் பெற்று அங்கீகரிக்கப்பட்டனர்.
இது கடந்த ஆண்டின் விருதாளர்கள் எண்ணிக்கையைவிடக் கிட்டத்தட்ட இரு மடங்காகும்.
தானா மேரா நிலையத்தில் புதன்கிழமை (நவம்பர் 25) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சிறைத்துறையில் 2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், கடந்த 25 ஆண்டுகளில் 2,500க்கும் மேற்பட்டோருக்குப் பயனளித்துள்ளது. இளம் கைதிகள் தங்களது தனிப்பட்ட ஒழுக்கத்தை வளர்த்துக்கொண்டு, சமூகப் பொறுப்புணர்வுடன் செயலாற்ற இத்திட்டம் பெரிதும் துணைநிற்கிறது.
குறைந்தது ஆறு மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை குறிப்பிட்ட பயிற்சி மணிநேரங்களை நிறைவுசெய்வதன் மூலம் கைதிகள் வெண்கலம், வெள்ளி, தங்க விருதுகளுக்குத் தகுதி பெறுகின்றனர்.
இவ்வாண்டு 39 பேர் தங்க விருதையும், 27 பேர் வெள்ளி விருதையும், 30 பேர் வெண்கல விருதையும் வென்றனர்.
நேர்மறையான மாற்றம் என்பது துணிச்சலையும் புதிய அனுபவங்களை ஏற்கும் மனப்பான்மையையும் கோருகிறது என்று தமது உரையில் குறிப்பிட்டார் அமைச்சர் டோங்.
“கடந்த காலம் ஒருபோதும் ஒருவரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்காது என்பதை உணர்வதே மாற்றத்தின் தொடக்கம். சௌகரியமான வட்டத்திலிருந்து வெளியேறி சமூகத்திற்குப் பயனளிக்கும் செயல்களில் ஈடுபடும்போதுதான் வாழ்க்கையின் உண்மையான உயர்வு வெளிப்படுகிறது,” என்றார் அவர்.
சமூகத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் பிணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நாம் செய்யும் நற்செயல்கள் பிறர் வாழ்வில் ஆக்ககரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், குடும்பத்தினரின் ஆதரவு இதற்கு இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டார்.
வாழ்க்கைப் பயணம் எப்போதும் எளிதாக இருக்காது என்று கூறிய அமைச்சர் டோங், விடுதலைக்குப் பிந்தைய வாழ்க்கையில் சவால்களும் பின்னடைவுகளும் ஏற்படும்போது மனந்தளராது மீண்டெழ வேண்டும் என்று வலியுறுத்தினார்.
குடும்பத்தினரின் மாறாத அன்பு, சிறை அதிகாரிகளின் தொடர் வழிகாட்டுதல், சமூக அமைப்புகளின் அரவணைப்பு ஆகியவை கைதிகளின் மறுவாழ்வுப் பயணத்தில் வலிமையான தூண்களாக விளங்கும் என்றார் அவர்.
விருது பெற்ற கைதிகள் தொண்டூழியக் கற்றல், இயற்கை விழிப்புணர்வுப் பயிற்சி, ஆரோக்கியமான வாழ்வு ஆகிய பிரிவுகளில் ஈடுபட்டனர். முதியோர் இல்லத்தினருக்கு வண்ண வாழ்த்து அட்டைகள் உருவாக்குதல், கூடாரம் அமைக்கும் நுணுக்கங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
தங்க விருது வென்ற கைதிகள் முதியோருடன் கலந்துரையாடுதல், உட்புறத்தில் மண்ணில்லா முறையில் வளர்த்த புதிய காய்கறிகளை எபெக்ஸ் ஹார்மனி லாட்ஜ், எச்சிஎஸ்ஏ டேஸ்பிரிங் அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கிய சமுதாயத் தலைமைத்துவத் திட்டங்களை முன்னெடுத்தனர்.
இளம் கைதியான 18 வயது ஹெர்பர்ட் (உண்மைப் பெயரன்று) இவ்வாண்டு தங்க விருது வென்ற சாதனையாளர்களில் ஒருவர். கலவரக் குற்றத்திற்காக ஓராண்டுச் சிறைத்தண்டனையை நிறைவேற்றிவரும் இவர், சிறைப் பள்ளியில் வேலையிட எழுத்தறிவுப் (WPL) பாடத்தைத் தீவிரமாகப் பயின்று வருகிறார்.
வார நாள்களில் படிப்பையும் வார இறுதியில் தேசிய இளையர் சாதனை விருதுத் திட்டத்தின் பயிற்சிகளையும் மேற்கொள்ளும் இவர், புதிய விளையாட்டுத் திறன்களை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார்.
வாழ்நாளில் இதுவரை தாம் எந்தவொரு விருதையும் பெற்றதில்லை என்று குறிப்பிட்ட ஹெர்பர்ட், “தங்க விருது கிடைத்திருப்பது எனக்குப் பெரிதும் வியப்பாகவும் ஊக்கமாகவும் உள்ளது. இத்திட்டம் புதிய தன்னம்பிக்கையையும் பிறருடன் நன்முறையில் பழகும் துணிச்சலையும் தந்துள்ளது,” என்றார்.
சிறைக்கு நேரில் வந்து ஆதரவளித்த தாயாரும் அக்காவும் காட்டிய அன்பே தனது மாற்றத்திற்குக் காரணம் என்ற அவர், விடுதலையானதும் தாயாருடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாகவும், தொடர்ந்து உயர்கல்வி கற்று பின்னர் உள்அலங்கார வடிவமைப்பாளராகப் பணிபுரிய ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார்.
கைதிகளை வழிநடத்துவதில் ஏ3 சிறைக்கூடத்தின் தேசிய இளையர் சாதனை விருதுத் திட்டப் பிரதிநிதியான 33 வயது மறுவாழ்வு அதிகாரி முகம்மது ஹக்கீம் முக்கியப் பங்கு வகித்து வருகிறார்.
தொடக்கத்தில் இளையர்கள் பலர் இத்திட்டத்தில் பங்கேற்கத் தயக்கம் காட்டியதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களின் திறமைகளையும் சமுதாயப் பங்களிப்பின் மதிப்பையும் உணரவைப்பதில் தாம் தொடர்ந்து கவனம் செலுத்துவதாகக் கூறினார். கைதிகளுடன் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து பேசி, அவர்களின் கவலைகளைப் புரிந்துகொண்டு நம்பிக்கையை வளர்க்க முயல்வதாகவும் அவர் கூறினார்.
“தொடக்கத்தில் ஒதுங்கி நின்ற இளையர்கள், தங்களுக்குள் இருந்த திறமைகளை உணர்ந்து மேடைகளில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் அளவிற்குத் தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்பதைக் காண்பது அளவிடற்கரிய மனநிறைவைத் தருகிறது,” என்று அவர் கூறினார்.
சிறை அதிகாரிகள் பாதுகாப்புக் காவலர்கள் மட்டுமல்லாது, கைதிகளின் நல்வாழ்வுப் பயணத்தில் ஆக்ககரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வழிகாட்டிகளாகவும் திகழ்வதை இந்த மாற்றங்கள் உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
