சிங்கப்பூர் தேசிய இளையர் மன்றத்தால் நடத்தப்பட்ட எஸ்ஜி இளையர் கருத்தரங்கில் பங்கேற்ற ஏறத்தாழ 600 பேரின் தனிப்பட்ட விவரங்கள் தவறுதலாகக் கசியவிடப்பட்டுள்ளன.
பங்கேற்பாளர்களின் பெயர்கள், அடையாள அட்டை எண்கள் ஆகியவை தனிநபர் ஒருவரின் மின்னஞ்சல் முகவரிக்குத் தவறுதலாக அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் முஹைமின் அப்துல் மாலிக் எழுப்பிய கேள்விக்குக் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் டேவிட் நியோ பதிலளித்தார்.
ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதியன்று நடந்த இந்தச் சம்பவம் ஒரு மனிதத் தவற்றால் நிகழ்ந்தது என்றும் தனது தரவு நிர்வாக முறையைப் பலப்படுத்த மன்றம் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
சிங்கப்பூர் அரசாங்கம், இளையர்கள் மற்றும் பங்குதாரர்களை ஒன்றிணைத்து, இளையர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்க தேசிய இளையர் மன்றத்தால் ஆண்டுதோறும் எஸ்ஜி இளையர் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
இவ்வாண்டு ஜூலை மாதம் சன்டெக் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் எஸ்ஜி இளையர் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது. தகவல் கசிவு நேரிட்ட அதே நாளில், தரவு அடங்கிய கோப்பு அனுப்பப்பட்டதை மன்றம் கண்டறிந்ததாகவும் தகவல்களை அழித்துவிடுமாறு அதைப் பெற்ற நபரிடம் கோரியதாகவும் அமைச்சர் டேவிட் நியோ தெரிவித்தார்.
ஆனால், அந்த நபரைத் தொடர்புகொள்ள மீண்டும் மீண்டும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதையடுத்து, மேற்கொண்டு நியாயமான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று மதிப்பிட்ட தேசிய இளையர் மன்றம், செப்டம்பர் 3ஆம் தேதியன்று பாதிக்கப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இச்சம்பவம் குறித்து முறைப்படித் தெரிவித்தது. அந்த மின்னஞ்சலில் மன்றம் தனது வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக்கொண்டதோடு, இச்சம்பவம் தொடர்பாகத் தொடர்புகொள்வதற்கான வழிமுறைகளையும் வழங்கியது.
மேலும், கூடுதல் சந்தேகங்களும் கவலைகளும் கொண்ட பங்கேற்பாளர்களை அதிகாரிகள் நேரில் சந்தித்து விவரங்களை விளக்கியதாக அமைச்சர் நியோ குறிப்பிட்டார்.
தேசிய இளையர் மன்றம் ஒரு பொதுச் சேவை அமைப்பாக இருப்பதால், அது தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வரவில்லை. எனவே, இது தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகார வரம்பிற்குள் அமையாது.
அதற்குப் பதிலாக, பொதுத்துறை (நிர்வாக) சட்டத்துக்கு உட்பட்டு இச்சம்பவம் கையாளப்படுகிறது. இச்சட்டத்தின்கீழ், அனுமதியின்றித் தகவல்களை வெளிப்படுத்துதல் மற்றும் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய குற்றங்களுக்கு ஆளாகும் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
