கோலாலம்பூர்: மாநில அளவிலான சட்டங்கள் இதுவரை மின்சிகரெட் விற்பனையைத் தடுக்கத் தவறியதை அடுத்து, மலேசியா தனது அண்டை நாடான சிங்கப்பூரைப் பின்பற்றி, படிப்படியாக மின்சிகரெட் புழக்கத்தை முழுமையாகத் தடை செய்ய திட்டமிட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு முதல் மின்சிகரெட் விற்கும் உரிமம் முடக்கப்பட்ட போதிலும், ஜோகூர் பாருவின் மின்சிகரெட் சந்தை தொடர்ந்து செழிப்படைந்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது மின்சிகரெட் புழக்கத்தை முற்றிலும் தடைசெய்துள்ள சிங்கப்பூருக்கு விநியோக வழிகளைத் திறந்து வைத்திருக்கிறது.
மின்சிகரெட் விற்பனையில் தொடங்கி இறுதியில் அனைத்து மின்சிகரெட் தயாரிப்புகளுக்கும் அந்தத் தடை படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்று மலேசிய சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது செப்டம்பர் 10ஆம் தேதியன்று ஒரு நாடாளுமன்ற எழுத்துபூர்வ பதிலில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புதிய தடை எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்று திரு ஸுல்கிஃப்லி தெரிவிக்கவில்லை.
“தற்போதுள்ள கட்டுப்பாடுகளின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும், ஒட்டுமொத்த மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு விரிவான கொள்கையை வரைவதற்கும் ஒரு முழுமையான மதிப்பாய்வு நடத்தப்படுகிறது.
“எனவே, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உகந்த, நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதிசெய்ய படிப்படியாகவும் எச்சரிக்கையுடனும் முடிவுகள் எடுக்கப்படும், ”என்று அமைச்சர் கூறினார்.
பல அமைச்சுகளும் அமைப்புகளும் மின்சிகரெட்டுகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க சட்டத்தை உருவாக்கி வருகின்றன. இதில் நிதி மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சுகள், மலேசியக் காவல்துறை, மலேசிய சுங்கத் துறை ஆகியவை அடங்கும் என்றும் திரு ஸுல்கிஃப்லி விவரித்தார்.
2019ஆம் ஆண்டில் 2.27 பில்லியன் ரிங்கிட்டாக இருந்த மின்சிகரெட் விற்பனை மதிப்பு, 2023ஆம் ஆண்டில் 3.48 பில்லியன் ரிங்கிட்டாக (S$1.05 பில்லியன்) அதிகரித்துள்ளது என்று மலேசிய மின்சிகரெட் வர்த்தக சபை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
2023 உலகளாவிய பெரியவர்களுக்கான புகையிலை கணக்கெடுப்பின்படி, 1.4 மில்லியன் மலேசியர்கள் மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முடிவை சிங்கப்பூர் அரசாங்கம் வரவேற்கும். ஏனெனில் 2023ஆம் ஆண்டில் சிங்கப்பூரர்கள் மலேசிய விற்பனையாளர்களிடமிருந்து மொத்தமாக மின்சிகரெட்டுகளை முன்பதிவு செய்து வருவதாகவும், அவை ஜோகூருக்கு அனுப்பப்படுவதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 26ஆம் தேதி, சிங்கப்பூர் அதிகாரிகள் 19 கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி 90,000க்கும் மேற்பட்ட மின்சிகரெட்டுகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருள்களைப் பறிமுதல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
“பிரச்சினையைச் சரிசெய்வதைவிட தடுப்பதே சிறந்தது. இந்த தயாரிப்புகள் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு முன்பு, அவற்றுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுப்பது அதிக குற்றங்கள் நிகழ்வதைத் தடுக்கும். ஆகவே, மின்சிகரெட்டுகளை இப்போதே தடை செய்வது நல்லது,” என்று ஜோகூர் மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் இங் கிம் ஃபாங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.