ஹொங் லிம் பூங்காவில் பேரணி நடத்திய இயற்கைப் பிரியர்கள், ஆர்வலர்கள்

ஹொங் லிம் பூங்காவில் பேரணி நடத்திய இயற்கைப் பிரியர்கள், ஆர்வலர்கள்

1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ராய்ட்டர்ஸ்

17 Aug 2026 - 1:33 pm

1 mins read

கில்மன் பேரெக்ஸ், மாஜு வனப்பகுதி ஆகியவற்றில் வீடுகளைக் கட்டுவதற்கான திட்டம் குறித்து கூடுதல் விவரங்களைப் பகிர்ந்துகொள்ளும்படி கோரி இயற்கைப் பிரியர்களும் ஆர்வலர்களும் ஹொங் லிம் பூங்காவில் பேரணி நடத்தியுள்ளனர்.

‘எஸ்ஜி கிளைமெட் ரேலி’ என்ற அமைப்பின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) அந்தப் பேரணி இடம்பெற்றது.

வீடமைப்புக்கென வனப்பகுதியில் ஒதுக்கப்பட்ட பகுதி குறித்தும் அதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டபோது கருத்தில்கொள்ளப்பட்ட அம்சங்கள் பற்றியும் தகவல்கள் பெறுவது அவசியம் என்று ஆர்வலர்கள் கூறினர்.

பேரணியில் கலந்துகொண்ட சிலர் கவிதைகள் வாசித்தனர். அனைவரும் ஒன்றுகூடி பாடல்களைப் பாடியவாறு பேரணியை முடித்துக்கொண்டனர். எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களும் பேரணியில் கலந்துகொண்டனர்.

(இடமிருந்து ஐந்தாவது) சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் பால் தம்பையா, (இடமிருந்து ஆறாவது) சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் லியோங் மன் வாய், (இடமிருந்து ஏழாவது) சானி இஸ்மாயில் ஆகியோர் மக்களுடன் பேரணியில் கலந்துகொண்டனர்.
(இடமிருந்து ஐந்தாவது) சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் பால் தம்பையா, (இடமிருந்து ஆறாவது) சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் லியோங் மன் வாய், (இடமிருந்து ஏழாவது) சானி இஸ்மாயில் ஆகியோர் மக்களுடன் பேரணியில் கலந்துகொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கில்மன் பேரெக்ஸ், மாஜு வனப்பகுதியில் கூடுதலான பசுமை இடங்கள் பாதுகாக்கப்படும் என்று தேசிய வளர்ச்சி துணைமைச்சர் ஆல்வின் டான் இம்மாதம் 14ஆம் தேதி தெரிவித்தார். அப்படியென்றால், இரு பகுதிகளில் குறைவான வீடுகளே கட்டப்படும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இயற்கை ஆர்வலர் குழுக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளையும் உள்ளடக்கி இரு பகுதிகளுக்குமான முதற்கட்ட திட்டங்கள் வரையப்பட்டன. அதன்படி, கில்மன் பேரெக்சில் 40 விழுக்காட்டுப் பசுமை பகுதியையும் மாஜு வனப்பகுதியில் 35 விழுக்காட்டுப் பசுமைப் பகுதியையும் அழிக்காமல் பாதுகாக்க முடிவெடுக்கப்பட்டது.

அடுத்த பத்தாண்டுகளில் சிங்கப்பூரின் வீடமைப்புத் தேவைகளைப் பூர்த்திசெய்ய கில்மன் பேரெக்சிலும் மாஜு வனப்பகுதிக்கு அருகே உள்ள சன்செட் வேயிலும் உள்ள காட்டுப்பகுதிகள் மேம்படுத்தப்படவேண்டும் என்று திரு டான் இம்மாதம் ஆகஸ்ட் 4ஆம் தேதி நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்