பாய லேபார் மறுமேம்பாட்டுத் திட்டம்: மூன்றில் ஒரு பங்கைப் பசுமைவெளியாகத் தக்கவைக்க பரிந்துரை

2 mins read
2f31a5a7-92b3-4806-8a83-ef6e67972fdb
முன்னைய பாய லேபார் விமானத் தளம் இருந்த பகுதி வசதிகளுடன் கூடிய பாதசாரிகளை மையமாகக் கொண்ட குடியிருப்பு வட்டாரமாக மாறும். - படம்: நகர மறுசீரமைப்பு ஆணையம்

பாய லேபார் ஆகாயப்படைத் தளத்தைச் சுற்றியுள்ள பகுதியில் 2030களில் மறுமேம்பாட்டுப் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், அங்குள்ள தாவரங்களில் மூன்றில் ஒரு பங்கை பசுமைவெளியாகத் தக்கவைக்க வேண்டும் என்று சிங்கப்பூர் இயற்கை ஆர்வலர் சங்கம் (Nature Society Singapore) பரிந்துரைத்துள்ளது.

காடு, பூங்கா நிலம், நீர்நிலைகளை உள்ளடக்கிய கிட்டத்தட்ட 389 ஹெக்டர் நிலத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான தனது திட்டம் குறித்து விளக்கமானதோர் அறிக்கையை நகர மறுசீரமைப்பு ஆணையத்திற்குச் (யுஆர்ஏ) சங்கம் வழங்கியுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

சிங்கப்பூர் இயற்கை ஆர்வலர் சங்க மதிப்பீடுகளின்படி, அங்கு வீடமைப்பு, தொழில்துறை நோக்கங்களுக்காக ஏறக்குறைய 1,271 ஹெக்டர் பரப்பளவு மறுமேம்பாடு காணவுள்ளது. இது உட்லண்ட்சைவிட சற்றுப் பெரியது.

அதில் கிட்டத்தட்ட 805 ஹெக்டர் பல்லுயிர்ச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் என்று சங்கம் தெரிவித்துள்ளது. அவை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் முக்கிய வாழிடப் பகுதிகளைக் குறிக்கின்றன.

வடகிழக்குச் சிங்கப்பூரில் கடைசியாக காணப்படும் இயற்கை வனப்பகுதிகளில் ஒன்றை இந்தப் பகுதியில் உள்ள பசுமை பிரதிபலிக்கிறது என்று சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டோனி ஓ’டெம்ப்சே கூறினார்.

“மேம்பாடு காணவிருக்கும் 1,271 ஹெக்டர் பரப்பளவில் கிட்டத்தட்ட 805 ஹெக்டர் வாழிட இழப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், இயற்கை வன, வாழிடப் பகுதியில் குறிப்பிட்ட அளவைப் பேணவும் பகுதி முழுவதும் இணைப்பை வழங்கவும் தணிப்பு நடவடிக்கைகள் தேவை,” என்று சங்கம் தனது அறிக்கை வழியாகக் கேட்டுக்கொண்டுள்ளது.

வாழிடங்களுக்கு இடையில் விலங்குகள் சுதந்திரமாக நடமாடி உணவு தேடவும் செழித்து வளரவும் காடுகள் உதவுகின்றன.

ஆகாயப்படை தளத்தில் உள்ள பசுமைவெளியும், தெம்பனிஸ் சாலையிலிருந்து கோனி தீவு மற்றும் பிடோக் நீர்த்தேக்கப் பூங்கா வரை நீளும் அருகிலுள்ள பசுமைவெளியும், பூர்வீக வனவிலங்குகளுக்கான வாழ்விடங்களாகவும் சுற்றுச்சூழல் பசுமைப்பாதையாகவும் விளங்குகின்றன என்று சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அதில் பாய லேபார் ஆகாயப்படைத் தளமும், சிராங்கூன் ஆற்றை ஒட்டிய மற்றும் தெம்பனிஸ் குவாரி வனப்பகுதிகளும் அடங்கும்.

இந்நிலையில், சிராங்கூன் ஆறு, பாய லேபார் ஆகாயப்படைத் தளம் தொடர்பில் சங்கத்தின் பரிந்துரைகள் கிடைத்துள்ளன என்றும் அவை மதிப்பீடு செய்யப்படும் என்றும் நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்