பருவநிலை மீள்திறனில் முன்னுதாரணமாகத் திகழும் ‘நேவல் பேஸ்’ தொடக்கப்பள்ளி

பருவநிலை மீள்திறனில் முன்னுதாரணமாகத் திகழும் ‘நேவல் பேஸ்’ தொடக்கப்பள்ளி

3 mins read
44e00f88-e311-4584-9546-37f4eac7e954
சூரிய ஆற்றலால் இயங்கும் நீரியல் அமைப்பைக் கொண்ட ‘நேவல் பேஸ்’ தொடக்கப்பள்ளியின் புதுப்பிக்கப்பட்ட நல்வாழ்வுத் தோட்டம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘நேவல் பேஸ்’ தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ளது அதன் புதுப்பிக்கப்பட்ட நல்வாழ்வுத் தோட்டம். இங்குள்ள தனித்துவமான சூரிய ஆற்றலால் இயங்கும் நீரியல் (hydroponics) முறையைப் பயன்படுத்தி, மாணவர்கள் ‘கங்கொங்’ போன்ற கீரைகளை வளர்க்கின்றனர்.

‘பசுமையாவோம் எஸ்ஜி 2026’ இயக்கத்தின் தொடக்கவிழாவில், துணைப் பிரதமர் கான் கிம் யோங் அந்தப் புத்தாக்கத் தோட்டத்தை திங்கட்கிழமை (மே 11) அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.

சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஒரு தனி நிகழ்வாகக் கருதப்படாமல், மாணவர்களின் அன்றாடக் கற்றலிலும் பள்ளிப் பண்பாட்டிலும் அது ஒருங்கிணைக்கப்பட்டது.

பள்ளியின் ஆழமான சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை அங்கீகரிக்க, ‘நேவல் பேஸ்’ தொடக்கப்பள்ளி அந்தத் தேசிய நிலைத்தன்மை இயக்கத்தின் தொடக்கவிழாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

பள்ளியின் நிலைத்தன்மைத் திட்டங்களை ‘செயில்’ (SAIL) கட்டமைப்பின்கீழ் முறைப்படுத்த அறிவியல் துறைத் தலைவர் ஷாமினி நானூ நாகேந்திர தாஸ், 38, பள்ளியின் தலைமை ஆசிரியர் ரிச்சர்ட் சியாவுடன் இணைந்துப் பணியாற்றினார்.

‘நேவல் பேஸ்’ தொடக்கப்பள்ளிஅறிவியல் துறைத் தலைவர் ஷாமினி நானூ நாகேந்திர தாஸ், 38.
‘நேவல் பேஸ்’ தொடக்கப்பள்ளிஅறிவியல் துறைத் தலைவர் ஷாமினி நானூ நாகேந்திர தாஸ், 38. - படம்: யோகிதா அன்புச்செழியன்

பாடத்திட்டம், தகவமைத்துக்கொள்ளும் வளாகம், அனைவரையும் உள்ளடக்கிய பண்பாடு, கற்றல் சமூகம் ஆகிய நான்கு முக்கியத் தூண்களை அந்தக் கட்டமைப்பு கொண்டுள்ளது.

புத்தக அறிவோடு நின்றுவிடாமல், ‘சுற்றுச்சூழல் செயல்பாட்டுக் காவலர்கள்’ திட்டத்தின் மூலம் தாவர வளர்ச்சியை நேரடியாகக் கண்காணித்து மாணவர்கள் கவனிப்புத்திறன், பிரச்சினை தீர்க்கும் திறன் போன்ற ஆய்வுத் திறன்களை வளர்த்துக்கொள்கின்றனர்.

மேலும், தொடக்கநிலை 1ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உணவுக் கழிவுகளைப் பிரிப்பதிலும், தொடக்கநிலை 5, 6 ஆம் வகுப்பு மாணவர் தலைவர்களுக்குச் சமூகத் திட்டங்களை வழிநடத்துவதிலும் பயிற்சி அளித்து, வயதுக்கேற்ற நிலைத்தன்மைக் கல்வியைப் பள்ளி வழங்கிவருகிறது.

நல்வாழ்வுத் தோட்டத்தின் சூரியசக்தி நீரியல் அமைப்பு குறித்து விளக்கிய திருவாட்டி ஷாமினி, சுற்றுச்சூழல் மீது பள்ளிக்கு இருக்கும் உண்மையான அக்கறையை எடுத்துரைத்தார்.

“ஒவ்வொரு சிறிய செயலும் மாற்றத்திற்கான அலைகளை உருவாக்கும் என்பதை இளம் மாணவர்கள் உணர வேண்டும். சிறிய செயல்கள்கூட பருவநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் புரியவைத்து, அவர்களை மாற்றத்திற்கான உந்துசக்தியாக உருவாக்க விரும்புகிறோம்,” என்றார் அவர்.

தோட்டத்தின் அறுவடையைச் சமூகக் குளிர்பதனப்பெட்டிகள் மூலம் தேவையுடைய குடியிருப்பாளர்களுடன் பகிர்ந்துகொள்வது, ‘நாம் முதல்’ (We First) என்ற சமூகப் பண்பாட்டை மாணவர்களிடம் வளர்ப்பதாகத் திரு சியா கூறினார்.

சமூகத் தொண்டூழியர்களுடன் இணைந்து தோட்டத்தில் வளர்க்கப்படும் காய்கறிகளை விநியோகிக்கும் மாணவர்கள், தங்களின் செயல்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தை நேரடியாக உணர்கின்றனர்.

“இளம் சிறார்கள் இயல்பாகவே ஆர்வமிக்கவர்கள். அர்த்தமுள்ள நிலைத்தன்மை முயற்சிகளில் ஈடுபடும்போது, தங்கள் செயல்களின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்துகொள்கின்றனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

சமூகப் பங்காளித்துவங்கள் மூலம், இந்தப் பண்பாடு பள்ளி வளாகத்தைத் தாண்டி விரிவாக்கம் காண்கிறது. டெங்கித் தடுப்பு, நீடித்த நிலைத்தன்மை குறித்து முதியவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, மாணவர்கள் ‘லயன் பிஃப்ரெண்டர்ஸ்’ (Lions Befrienders) அமைப்புடன் இணைந்து ‘மோஸி சேர் யோகா’ (Mozzie Chair Yoga) போன்ற நடவடிக்கைகளை வடிவமைத்தனர்.

ஆடைக்கழிவுகளை மேம்படுத்தித் துணிக் கைவினைப்பொருள்களை உருவாக்க ‘குளூப்’ (Cloop) சமூக நிறுவனத்துடனும் மின்னணுக் கழிவு மறுசுழற்சி குறித்துக் கதைசொல்லல் வழி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ‘ஆல்பா இ-வேஸ்ட்’ (ALBA E-waste) நிறுவனத்துடனும் பள்ளி கைகோத்துள்ளது. இம்முயற்சிகள், மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் நிலைத்தன்மையைக் காப்பவர்களாக உருவாவதை உறுதிசெய்கின்றன.

குறிப்புச் சொற்கள்