முன்னைய சிங்கப்பூரில் மலையாளச் சமூகத்தினர் குழுமி வாழ்ந்த வட்டாரமான செம்பவாங்கின் நேவல் பேஸ் கேரள நூலகத்தின் 70 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக ‘ஓண ராவு’ 2024 நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தேறியது.
‘சிங்கப்பூர் எஸ்போ’ அரங்கில் செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற அந்நிகழ்ச்சிக்குக் கிட்டத்தட்ட 400 பேர் வருகையளித்தனர். இசை, நடனம், நாடகம் என நிறைவான வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி, 70ஆம் நிறைவாண்டைப் பிரதிபலிக்கும் விதமாக ஏழு அங்கங்களைக் கொண்டிருந்தது.
ஓணத் திருநாளுடன் தொடர்புள்ள புராண பாத்திரமான மகாபலி சக்கரவர்த்தி வேடத்தில் நடிகர் அரச உடையில் ஆசி வழங்கிக்கொண்டு பவனி வந்தது, அவ்விடத்திற்கே கலகலப்பையும் கலாசாரச் சுவையையும் சேர்த்தது.
தொடக்கக் கலைநிகழ்ச்சிகளுக்குப் பின்னர், நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வருகை அளித்த சுகாதார அமைச்சர் ஓங் யி காங், குத்துவிளக்கேற்றி சிறப்பித்து பின் விருதுகளை வழங்கினார்.
நூலகத்தின் இவ்வாண்டுக்கான ‘சிம்மபுரி’ விருதை இந்திய திரைப்பட நடிகை அம்பிகாவின் சார்பில் பாடகர் ஜி. வேணுகோபால் பெற்றார். அத்துடன் இதய மருத்துவ நிபுணர் வி. பி. நாயருக்கு சமூக சேவைக்கான ‘கேகே’ விருது வழங்கப்பட்டது.
“நூலகம் பற்றிய இனிமையான நினைவுகள் என் மனதில் தொடர்ந்து பசுமையாக உள்ளன. நூலகமாக இருந்ததையும் தாண்டி, அது சமூக, கலாசார, விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கான மையமாகத் திகழ்ந்தது. அங்கு நான் உடல் ஆரோக்கியம் தொடர்பான உரைகளை ஆற்றியுள்ளேன்,” என்று திரு நாயர் கூறினார்.
1954ல் எளிமையாகத் தொடங்கிய இந்நூலகம், நேவல் பேஸ் பகுதியிலுள்ள மலையாள ஊழியர்களுக்கு அம்மொழிப் புத்தகங்களை இரவல் தந்ததாக அமைப்பின் செயற்குழு உறுப்பினர் பூதேஷ் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
“புத்தகங்கள் மட்டுமன்றி இந்தியாலிருந்து தருவிக்கப்படும் செய்தித்தாள்களும் இடம்பெற்றன. நூலகத்தின் தோற்றமும் மலையாள மொழி நூல்களையும் காண்பிக்கும் புகைப்படங்கள் நிகழ்ச்சி மேடை மின்திரைகளில் காண்பிக்கப்பட்டன,” என்றார் திரு பூதேஷ்.
தொடர்புடைய செய்திகள்
செம்பவாங், ஈசூன் வட்டாரங்களில் பல்வேறு சமூக மன்றங்களுடன் இணைந்து செயல்பட்ட நூலகம், 2001ல் தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டது. இருந்தபோதும் அது இன்றளவும் கேரளச் சமூகத்தினரை இணைக்கும் அமைப்பாகத் திகழ்கிறது. அத்துடன், சமூக மன்றங்களில் இந்த அமைப்பு, தனது சமூக, விளையாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்தது.
மலையாளத்தில் ‘பூக்களம்’ என அழைக்கப்படும் மலர்களால் உருவாக்கப்பட்ட பூக்கோலமும் சீன, மலாய், தமிழர்களின் உதவியுடன் அமைக்கப்பட்டன.
இதில் சிங்கப்பூரின் ஐந்து நட்சத்திரங்களை பிரதிபலிக்கும் ஐந்து கோலங்கள் செய்யப்பட்டன. நடுவில் அமைப்பின் 70ஆம் ஆண்டு சின்னம். இவற்றைச் சங்கத்தின் 25 தொண்டூழியர்கள், நீ சூன் சென்ட்ரல் வட்டாரத்தின் தொண்டூழியர்களோடு இணைந்து உருவாக்கினர்.
நிகழ்ச்சியின் வெற்றி குறித்து நூலகத் தலைவர் திரு சுதீர் கோவிந்தபிள்ளை, தமது மனநிறைவை வெளிப்படுத்தனார். நிகழ்ச்சி அங்கங்கள் ஒன்றோடு ஒன்று நன்கு பிணைந்திருந்தன. “கலைஞர்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவின் தொடர் ஒத்திகையால் நிகழ்ச்சி சுமுகமாக நடந்தது,” என்று அவர் கூறினார்.