பிள்ளைகளை வழிநடத்த பெற்றோருக்குப் புதிய கண்ணோட்டம் தேவை: ஜோசஃபின் டியோ

மாறிவரும் மின்னிலக்க யுகம்

பிள்ளைகளை வழிநடத்த பெற்றோருக்குப் புதிய கண்ணோட்டம் தேவை: ஜோசஃபின் டியோ

3 mins read
a2488a5a-3230-4a2c-9cff-956979e35970
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும் கலந்துரையாடலை வழிநடத்தியவர்களுடன் அமைச்சர் ஜோசஃபின் டியோ.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.

வேகமாக மாறிவரும் மின்னிலக்க யுகத்தில், பிள்ளைகளுக்கு எது சிறந்தது என்பதைப் பெற்றோரால் கடந்தகால சிந்தனையோடு அறிவுறுத்த இயலாது.

பிள்ளைகள் எதிர்கொள்ளும் மாற்றங்களைப் பெற்றோரும் முதன்முறையாக அணுகுவதே இதற்கு முக்கியக் காரணம்.

பாதுகாப்பான மின்னிலக்கச் சூழலை அமைப்பது தொடர்பாக தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுடன் இணைந்து சனிக்கிழமை (ஜூலை 25) நடத்திய கலந்துரையாடலில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ இதனைக் கூறினார்.

ஜூன், ஜூலையில் நடைபெற்றுவரும் இக்கலந்துரையாடல்கள், பிள்ளைகளுக்குப் பாதுகாப்பான இணையச் சூழலை ஏற்படுத்தித் தருவதில் சமூகத்தின் பொறுப்பை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

பெற்றோர்க்காக கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், பல தலைமுறைகளையும் ஈர்த்திருப்பது அதன் சிறப்பம்சம்.

சிறுவர்கள், இளையர்கள், பெற்றோர், முதியவர்கள் எனப் பலரும் இதில் ஆர்வமாக கலந்துகொண்டனர். இணையப் பயன்பாட்டறிவு, வயது வரம்பின்றி அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்று என்பதைப் பங்கேற்பாளர்கள் உணர்ந்தனர்.

மூன்று இலக்குகளை அடைய அணுகுமுறை

சிறுவர்களுக்குப் பாதுகாப்பான இணையச் சூழலை ஏற்படுத்துதல், வயதுக்கேற்ற தகவல்களை மட்டும் அணுகுவதை உறுதிசெய்தல், நல்ல மின்னிலக்கப் பழக்கங்களை ஊக்குவித்தல் ஆகியவை அமைச்சின் மூன்று இலக்குகளாக விவரிக்கப்பட்டன.

வயதுக்குப் பொருத்தமில்லாத இணையப் பதிவுகளை அணுகுவது, முன்பின் தெரியாதோருடன் உரையாடுவது, அதிக திரைநேரம் உள்ளிட்டவை பெற்றோர் கவலையுறும் விவகாரங்களாக உள்ளதைப் புள்ளிவிவரங்கள் சுட்டின.

வருங்காலத்தைக் கருத்தில்கொண்டு, அமைச்சின் சார்பாக மூன்று நிலைகொண்ட அணுகுமுறை, (Tiered Access Model) கருத்துப் பரிமாற்றத்துக்கு முன்வைக்கப்பட்டது.

அதன்படி, எந்தெந்த வயதுப் பிரிவினர் எந்தெந்த இணையப் பதிவுகளை அணுகலாம் என்பது குறித்து விவாதங்கள் எழுந்தன.

தனிப்பட்ட கருத்துகளுக்கு வழிவகை

நெறியாளர்கள் தக்க கேள்விகளுடன் பங்கேற்பாளர்களின் பதில்களை முழுமையாகக் கேட்டறிந்தும் விவாதங்களை வழிநடத்தினர்.

உரையாடல்களைக் கவனித்த அமைச்சர் டியோ, “தகவல் தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்துவது குறித்து மக்கள் எந்த அளவிற்குப் புரிந்துவைத்திருக்கின்றனர் என்பதை அறிந்துகொள்ள இவை பெரிதும் உதவுகின்றன,” என்றார்.

மக்களின் தனிப்பட்ட கருத்துக்களுக்கு வழிவகுத்த சிறு குழு உரையாடல்கள். 
மக்களின் தனிப்பட்ட கருத்துக்களுக்கு வழிவகுத்த சிறு குழு உரையாடல்கள்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நமது கைவிரல்கள் ஒவ்வொன்றும் எப்படி வெவ்வேறு அளவில் இருக்கிறதோ, தகவல் தொழில்நுட்பத்தைப் பற்றிய புரிதல் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டிருப்பது இயல்பே என்றார் அவர்.

பெற்றோர் சந்திக்கும் சவால்களும் ஆறுதல் தரும் தீர்வுகளும்

சமூகத் தலைவர்களுடன் நடந்த கலந்துரையாடலில், அமைச்சர் டியோவுடனும் சுகாதாரத் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம்முடனும், டச் சமூகச் சேவைகள் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் டான், மனநலக் கழக மூத்த மருத்துவர் லிம் சூன் குவான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பங்கேற்பாளர்களின் பங்களிப்பிற்கு முக்கியத்துவம் அளித்த ஒன்றாக கலந்துரையாடல் அமைந்தது.

குழு உரையாடல்களை வழிநடத்திய நெறியாளர்கள், தத்தம் குழுவில் பேசப்பட்ட முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்த பிறகு, பங்கேற்பாளர்கள் அமைச்சர்களிடமும் நிபுணர்களிடமும் கேள்விகளைக் கேட்க வாய்ப்பளிக்கப்பட்டது.

பிள்ளைகளுக்குப் பெற்றோர் முன்மாதிரியாகத் திகழ வேண்டியதன் முக்கியத்துவத்தைத் துணையமைச்சர் ரஹாயு உணர்த்தினார்.

இணையத்தில் தாம் அதிக நேரம் செலவிட்டபோது தம் மகன் கைப்பேசி வாங்கி கேட்டதை நினைவுகூர்ந்த அவர், பிள்ளைகள் எப்போதும் பெற்றோரின் பழக்கவழக்கங்களைப் பின்தொடர்வர் என்றார்.

மின்னிலக்கச் சாதனங்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்து, பிள்ளைகளைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பதில் சவால்கள் நிலவுவதை அவர் ஒப்புக்கொண்டார். இதை எதிர்கொள்ள Be ScreenSmart இணையவாசல், மக்கள் கழகத்தின் PA Playgrounds போன்ற திட்டங்களை திருவாட்டி ரஹாயு சுட்டினார்.

அதிகத் திரை நேரம் பிள்ளைகளின் மனநலனையும் சமூக வளர்ச்சியையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளக்கிய மனநலக் கழகத்தின் டாக்டர் லிம், எல்லைகளை வகுத்துக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

புதிய கண்ணோட்டங்களைக் கேட்டறிந்து, பல விஷயங்களைக் கற்றுக்கொண்டதாக் கூறிய சந்தியா-வைரப்பன் தம்பதியர், “இக்காலகட்டத்தில் பிள்ளைகளை முழுமையாக இணையத்திலிருந்து விலக்கி வைக்க முடியாது. அதை எப்படிப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என்பதைத் தெரிந்துகொண்டு அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது மிக முக்கியம்,” என்று கூறினர்.

குறிப்புச் சொற்கள்