தேசிய தினக் கொண்டாட்டங்கள் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு மறுநாள் ஐந்து குடியிருப்புப் பேட்டைகளில் தொடரும்.
கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நேரடி நிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகள் ஆகியவையும் இடம்பெறும்.
தேசிய தின அணிவகுப்புச் செயற்குழுவுடன் இணைந்து செயல்பட்டு மக்கள் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் இவ்வாண்டின் கொண்டாட்டங்கள், ஆகஸ்ட் 10ஆம் தேதி பீஷான், பொங்கோல், ஈசூன், பாய லேபார், புவன விஸ்தா ஆகிய பகுதிகளில் 160,000க்கும் அதிகமானோரை ஈர்க்க நோக்கம் கொண்டுள்ளன.
குடியிருப்புப் பேட்டைகளில் நடைபெறவிருக்கும் கொண்டாட்டங்களுக்கான நுழைவுச்சீட்டுகளை ஜூலை 12ஆம் தேதி முதல் சமூக நிலையங்களில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
ஒவ்வொருவரும் இரண்டு நுழைவுச்சீட்டுகள் வரை பெறலாம். முதலில் வருவோருக்கு முதலில் வழங்கப்படும் அடிப்படையில், 100,000 நுழைவுச் சீட்டுகள் கிடைக்கப்பெறும்.
இருப்பினும், இடம் இருந்தால் நுழைவுச்சீட்டுகள் இல்லாதவர்களும் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளலாம்.
நுழைவுச்சீட்டுகள் உள்ளவர்கள் குறிப்பிட்ட இடங்களுக்குள் நுழைந்து, தேசிய தின அணிவகுப்பு அன்பளிப்புப் பையையும் பெற்றுக்கொள்ளலாம் என்று மக்கள் கழகம் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் தெரிவித்தது.
அனைத்து கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் திறந்த திடல்களில் நடைபெறும்.
தொடர்புடைய செய்திகள்
பீஷான் ரயில் நிலையத்திற்கு எதிரில், ‘வாட்டர்வே பாயின்ட்டு’க்கு அருகில் உள்ள பொங்கோல், ‘ஃபுட்சால்அரினா @ ஈசூன்’, பாய லேபார் குவார்ட்டர் 1க்கு அருகில், புவன விஸ்தா ரயில் நிலையத்திற்கு அருகில் ஆகியவையே அந்தப் பகுதிகள்.
வாணவேடிக்கை, குடும்பங்களுக்கு உகந்த நடவடிக்கைகள், சிங்கப்பூர் ஆயுதப் படை, சிங்கப்பூர் காவற்படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றின் வாகனக் காட்சிகள் ஆகியவையும் இடம்பெறும்.
இவ்வாண்டின் குடியிருப்புப் பேட்டைக் கொண்டாட்டங்களில் 2,600க்கும் மேற்பட்ட அடித்தள அமைப்புத் தொண்டூழியர்கள் ஈடுபடுகின்றனர்.
நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கு செல்லவேண்டிய சமூக நிலையங்கள் பட்டியலுக்கு தேசிய தின அணுவகுப்பின் இணையத்தளத்தை நாடலாம்.

